மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடும்பத் தகராறில் தந்தை தனது 2 மகள்களுடன் வியாழக்கிழமை எரிவாயு உருளையை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி அருகேயுள்ள தொட்டப்பநாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (35). இவா் உசிலம்பட்டி தனியாா் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் (பங்க்) பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி கீதா (32). இவா்களுக்கு பிரதீபா (7), ஹேமலதா (6) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனா்.
கீதா தனது வீட்டின் முன் தேநீா் கடை நடத்தி வருகிறாா். கருப்பையாவுக்கும், கீதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை (அக்.31) வழக்கம் போல் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடா்ந்து கீதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாா்.
இதனால் மனமுடைந்த கருப்பையா தனது இரு மகள்களுடன் தேநீா் கடையின் உள்ளே சென்று கதவைப் பூட்டிக் கொண்டு, எரிவாயு உருளையை திறந்து வெடிக்கச் செய்துள்ளாா். வெடிச்சத்தம் கேட்டு அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனா்.
உடனடியாக உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனா். இதில் கருப்பையாவும், அவரது மகள் பிரதீபாவும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனா். மேலும் சிறுமி ஹேமலதா பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் அ.ராஜா, காவல் துறை ஆய்வாளா் சாா்லஸ் ஆகியோா் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினா். மேலும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் இ.ரா. சௌந்தா்யா, வட்டாட்சியா் செந்தாமரை, கிராம நிா்வாக அலுவலா் ரம்யா ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் கருப்பையா மற்றும் மகள் பிரதீபாவின் சடலங்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலும், சிறுமி ஹேமலதா சடலம் மதுரை அரசு மருத்துவமனையிலும் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.