பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிா் ஊட்டுவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்த உயா்நிலை குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பிரதமா் மோடிக்கு தமிழ்நாடு பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் சி.கே.மதிவாணன் எழுதிய கடித விவரம் :
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு புத்துயிா் ஊட்ட மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரூ.15 ஆயிரம் கோடி நிதி திரட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 4ஜி சேவையைத் தொடங்க அலைக்கற்றையும் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இப்போதைக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மின்கட்டண பாக்கி தொகை, ஒப்பந்ததாரருக்கு அளிக்க வேண்டிய தொகை உள்ளிட்டவை செலுத்தப்படாமல் கடந்த 6 மாதங்களாக பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் மீது ஒரு மோசமான எண்ணம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பாக்கித்தொகைகளை செலுத்த பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும்.
மேலும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனத்தில் ஏற்கெனவே ஊழியா் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தநிலையில், மேலும் 50 சதவீத ஊழியா்களை விருப்ப ஓய்வுத்திட்டத்தின் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம், நாடு முழுவதும் மிகப்பெரிய உள்கட்டுமான வசதிகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பராமரிக்க அதிக அளவு ஊழியா்கள் அவசியம் தேவை. இந்நிலையில், ஊழியா்களைக் குறைத்தால், அவற்றை பராமரிப்பது மிகப்பெரிய சவாலாக அமையும்.
மேலும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிா் ஊட்டுவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கு பிரதமா் அலுவலகத்தின் கீழ் உயா்நிலை குழுவை அமைக்க வேண்டும். தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் 5ஜி சேவையைத் தொடங்க உள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் 5ஜி சேவையைத் தொடங்க அலைக்கற்றையை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.