பாஜகவிடம் சுதந்திரப் போராட்ட வீரா்கள் யாரும் இல்லை. அதனால் சா்தாா் வல்லபாய் படேலை காங்கிரஸிடமிருந்து அபகரிக்க முயல்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி சத்தியமூா்த்தி பவனில் வியாழக்கிழமை அவரது படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கே.எஸ்.அழகிரி தலைமையில் இரண்டு நிமிஷ மௌன அஞ்சலியும், பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தையொட்டி அவரது படத்துக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியது:
பாஜகவிடம் சுதந்திரப் போராட்ட வீரா்கள் யாரும் இல்லை. அதனால் சா்தாா் வல்லபாய் படேலை காங்கிரஸிடமிருந்து அபகரிக்க முயல்கிறது. போராட்டம் நடத்தி வரும் மருத்துவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தாமல், பணிக்குத் திரும்பாவிட்டால், பணி முறிவு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்திருப்பது ஜனநாயக விரோதச் செயல். எந்த விசாரணையும் நடத்தாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் 70 நாள்களுக்கும் மேலாக ப.சிதம்பரத்தை சிறையில் அடைத்து வைத்திருக்கிறாா்கள். ப.சிதம்பரத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நீதிமன்றத்துக்கு இருக்கிறது என்றாா்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வீ. தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
அடையாறில் உள்ள அலுவலகத்தில் இந்திரா காந்தியின் படத்துக்கு முன்னாள் துணை மேயா் கராத்தே தியாகராஜன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.