தமிழ்நாடு

பணநாயகத்தை நம்பி அ.தி.மு.க பெற்ற வெற்றி தொடர வாய்ப்பே இல்லை மு.க.ஸ்டாலின்

1st Nov 2019 03:36 PM

ADVERTISEMENT

பணநாயகத்தை நம்பி அ.தி.மு.க பெற்ற வெற்றி தொடர வாய்ப்பே இல்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அதில், இன்று நடைபெற்ற இந்தத் திருமணத்தை பொறுத்தவரையில் - சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சொன்னதைப்போல், தந்தை பெரியார் கண்ட கனவு, அறிஞர் அண்ணா எண்ணிக்கொண்டிருந்த அந்த இலட்சியம், தலைவர் கலைஞர் அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கக்கூடிய அந்த உணர்வு - அந்த அடிப்படையில்தான் இந்தத் திருமணம் இங்கு நடைபெற்றிருக்கிறது. 

இது ஒரு சீர்திருத்தத் திருமணம்  - இன்னும் சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணமாக, அதைவிடப் பெருமையாகச் சொல்ல வேண்டுமென்றால், இது ஒரு தமிழ்த் திருமணமாக நடந்தேறியிருக்கிறது.

ADVERTISEMENT

அத்தகைய திருமணத்தில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெறுகின்ற இடத்தில், அதை நடத்தி வைத்து அதில் வாழ்த்தி உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறபோது,  சீர்திருத்தத் திருமணங்கள் தொடர்பாக, வரலாற்றில் பதிவான ஒரு செய்தியை நான் எடுத்துரைப்பது வழக்கம்.

இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் 1967க்கு முன்பு நடைபெற்றிருந்தால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி - முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு நாம் பெற்றிருக்கவில்லை.

ஆனால் 1967-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்று அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில்  ஆட்சிக்கு வந்தது.  பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று, முதலமைச்சர் என்கிற அந்த உரிமையோடு  சட்டமன்றத்திற்குச் சென்று, சட்டமன்றத்தில் மூன்று முக்கியமான தீர்மானங்களை நமக்காக நிறைவேற்றித் தந்தார்கள்.

அதில் ஒன்றுதான் சீர்திருத்தத் திருமணம்!

"சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடி ஆகும்" என்கிற  தீர்மானத்தை அண்ணா அவர்கள் ஏகமனதாக நிறைவேற்றித் தந்தார்கள்.  அத்தகைய சிறப்புக்குரிய

சீர்திருத்தத் திருமணம் இங்கு நடந்தேறியிருக்கிறது என்றால், இந்தத் திருமணம் சட்டப்படி  செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது.

எனவே, இது சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல. சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம். இன்னும் பெருமையுடன் சொல்ல வேண்டுமென்றால், இது ஒரு தமிழ்த் திருமணம். இந்தத் தமிழ் மொழிக்கு "செம்மொழி" என்கிற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த தலைவர்தான், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் எனும் செய்தியை நாடு நன்கு அறியும்.

இன்றைக்கு இந்தச் செய்தியை நான் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு என்ன காரணம் என்றால், இன்று நவம்பர் 1ஆம் தேதி.

1956 நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ் மாநிலம் என்ற உரிமையை அன்றைக்கு நாம் பெற்றோம்.

அப்போது பிரிக்கப்பட்ட மாநிலம் தான் இந்த தமிழகம். (சென்னை மாகாணம்)

அன்று இந்தத் தமிழகத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் கிடையாது.  ‘மெட்ராஸ் ஸ்டேட்’  (சென்னை மாகாணம்) என்றுதான் பெயர் இருந்தது. 1956-இல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று உருவாகி, பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகுதான், ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு ‘தமிழ்நாடு’ என்ற பெயரும் நமக்கு அப்போதுதான் கிடைத்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது. கூடாது.

எப்படி, 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று, சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று, "சீர்திருத்தத் திருமணச் சட்டத்தை' நிறைவேற்றித் தந்தாரோ, அதேபோல், "சென்னை மாகாணம்" (மெட்ராஸ் ஸ்டேட்) என்று என்றழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்திற்கு, ‘தமிழ்நாடு’ என்ற பெயரையும் சட்டமன்றத்தில் பேரறிஞர்  அண்ணா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றித் தந்தார்.

அப்படி நிறைவேற்றித் தந்ததற்கு ஒரு பாராட்டு விழா தமிழக அரசின் சார்பில், நம்முடைய சென்னை மாநகரத்தில் இப்போது இருக்கும் கலைவாணர் அரங்கத்தில், - அப்போது "கலைவாணர் அரங்கம்" என்று பெயர் கிடையாது - 'சில்ட்ரன்ஸ் சென்டர்' - 'பாலர் அரங்கம்' என்றுதான் அதற்குப் பெயர். அந்த பாலர் அரங்கத்தில் அதற்கான விழா நடந்தது.

அந்த விழா நடைபெறுகிற நேரத்தில் பேரறிஞர் அண்ணா சற்று உடல்நலிவுற்று, தன்னுடைய வீட்டில் ஓய்வு  எடுத்துக் கொண்டிருந்தார். உடல் நலிவுற்ற நிலையில், அவர்  சிகிச்சைக்காக வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த விழா அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

அந்த விழாவிற்கு பேரறிஞர் அண்ணா போக வேண்டுமென்று முடிவெடுத்திருந்தார்.

அவருடைய வீட்டில் இருக்கக்கூடியவர்கள், அவருடன் 24 மணி நேரமும் பக்கத்தில் இருக்கக்கூடிய தம்பிமார்கள், நம்முடைய தலைவர் கலைஞர், நாவலர், பேராசிரியர், என்.வி.என்., மதியழகன், அம்மையார் சத்தியவாணிமுத்து போன்ற கட்சியினுடைய முன்னோடிகள், தலைவர்கள்  அனைவரும், "உங்களுடைய உடல்நலம்  சரி இல்லை. எனவே நீங்கள் இந்த விழாவிற்கு வரவேண்டாம், விழாவை ஒத்தி வைத்துவிடலாம்" என்று எடுத்துக் கூறி, அதனை வலியுறுத்தினார்கள்

குடும்பத்தில் இருக்கக்கூடியவர்கள் தடுக்கிறார்கள். நம்முடைய கட்சியில் இருக்கக்கூடிய முன்னோடிகள் அதை தவிர்க்க வேண்டும் என்று தடுமாறுகிறார்கள். ஏன், அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர்களும், "அந்த நிகழ்ச்சிக்கு அண்ணா போகக் கூடாது" என்று தடுத்து நிறுத்துகிறார்கள்.

ஆனால் அறிஞர் அண்ணா அதையெல்லாம் மீறி, அந்த உத்தரவுகளை எல்லாம் கடந்து, நேராக அன்றைக்கிருந்த பாலர் அரங்கத்திற்கு - விழா மேடைக்குச் சென்றார். அதில் பங்கேற்றார். பங்கேற்றது மட்டுமல்ல; அங்கு உரையாற்றவும் செய்தார்கள்.

உரையாற்றுகிறபோது, அறிஞர் அண்ணா சொன்னார்,

"நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கிடைத்திருப்பதையொட்டி  இந்த விழா நடைபெறுகிற நேரத்தில், என் உடல் நலத்தைப் பொறுத்தவரையில் இந்த விழாவிற்கு வரக்கூடாது, பங்கேற்கக்கூடாது என்று என்னுடைய மருத்துவர்கள் – குடும்பத்தினர் – தம்பிமார்கள் எல்லாம் தடுத்தார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி நான் வந்திருக்கிறேன் என்றால், தமிழ் நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் கிடைத்திருக்கும் இந்த விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை என்றொல், என்னுடைய உடல் இருந்து எந்தப் பயனும் இல்லை. அந்த உணர்வோடுதான் நான் இந்த விழாவில் பங்கேற்க வந்திருக்கிறேன்"

- என்று அறிஞர் அண்ணா சொன்னார்கள். இது வரலாறு!

எதற்காக நான் இவ்வேளையில் இதனைக் குறிப்பிடுகிறேன் என்றால், "மொழிவாரி மாநிலங்கள்" உருவான இந்நாளில், நம்முடைய இந்த மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்ற பெயரை அறிஞர் அண்ணா அவர்கள் தான் பெற்றுத்தந்தார்கள் என்பதை மிகுந்த நன்றியோடு குறிப்பிட வேண்டியது எனது கடமையாகும்.

அதன் தொடர்ச்சியாக, 1996-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, ‘மெட்ராஸ்’ என்ற இந்த மாநகரத்தின் பெயரை 'சென்னை' என்று மாற்றினார்கள் அந்தச் சென்னைக்கு இரண்டு முறை மேயராக இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன்  நான் என்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைக்கு நாட்டில் இருக்கும் நிலைகளையெல்லாம் நன்றாக உணர்ந்திருப்பீர்கள்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அந்த ஆட்சி எப்படி இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்!

முதலமைச்சரைப் பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ ஏதாவது சொன்னால், இப்போது இருக்கும் முதலமைச்சருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும் நாம், ஆட்சியில் நடைபெறக்கூடிய தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை ஆகும்

நான் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். அப்போதே நான் சட்டமன்றத்தில்,  எதிர்க்கட்சித் தலைவராக முதன் முதலில் பேசியபோது சொன்னேன்;

“திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் 1.1 சதவீத வித்தியாசத்தில் தான் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பை நாங்கள் இழந்திருக்கிறோம். ஆட்சிக்கு வரவில்லை என்பதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. ஆனால், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக வந்து அமர்ந்திருக்கிறோம். எதிரிக்கட்சியாக இருக்கமாட்டோம்; எதிர்க்கட்சியாக இருந்து நாங்கள் செயல்படுவோம்"

- என்று அன்றைக்கே சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறேன். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன்.

சொல்லிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்!

எனவே, அரசின் குறைபாடுகள் - அவலட்சணங்கள் - அரசு, நாட்டு மக்களுக்குச் செய்துகொண்டிருக்கும் துரோகங்கள் என அத்தனையும் உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

இதை ஆட்சி என்று சொல்லமுடியாது. எடப்பாடி தலைமையில் இருக்கும் ஆட்சியை கேலியாக, விமர்சனம் செய்யவேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை;

"இது எடப்பாடி ஆட்சியல்ல - எடுபிடி ஆட்சி" என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அதற்கு உதாரணங்கள் எத்தனையோ உண்டு!

நீட் பிரச்சினையாக இருந்தாலும் சரி; ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி; இப்படி எத்தனையோ பிரச்சினைகளை நம்மால் சொல்லமுடியும்.

இன்றைக்கு நாம் பத்திரிக்கைகளில் பார்த்திருக்கிறோம். 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிற கட்டாயம்  இன்றைக்கு நம்முடைய குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்குதான் இதுவரையில் பொதுத்தேர்வு இருந்தது.

எனவே, 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அவர்கள் மருத்துவர்களாக வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதையும் இன்றைக்கு தடுத்து நிறுத்திட நீட் என்கிற தேர்வு வந்துவிட்டது. அதனால், எத்தனை மாணவ – மாணவியர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போயிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இப்படி ஒரு நிலை!

மேலும், மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை திட்டத்தைக் கொண்டுவந்து 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பிற்கும், பொதுத் தேர்வு நடத்திட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது. இன்னும் சட்டம் கொண்டுவந்து உத்தரவு போடவில்லை. அதை நிறைவேற்றிட வேண்டும் என்று ஆணையும் வரவில்லை. ஆனால், அதற்கு முன்பே, இங்கு எடப்பாடி தலைமையில் இருக்கும் எடுபிடி ஆட்சி 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பில் இன்றைக்கு பொதுத் தேர்வு எழுதக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், நம் வீட்டுக் குழந்தைகள் கல்வியில் முன்னேறி விடக்கூடாது,  அவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக வந்துவிடக்கூடாது என்பதற்காக, இதுபோன்ற திட்டங்களை திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு நீங்கள் வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும். உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி; பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி; அது எந்தத் தேர்தலாக இருந்தாலும் கழகத்தை பெரு வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இப்போது  இந்த இரண்டு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி ஜனநாயகத்தை நம்பாமல் - பணநாயகத்தை நம்பியிருக்கலாம்; பண நாயகம் வெற்றி பெற்றிருக்கலாம்! ஆனால், இது தொடராது; தொடர்வதற்கு வாய்ப்புக் கிடையாது!

பொதுத் தேர்தலைப் பொறுத்த வரையில், மக்கள் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார்கள். அதில் எள்ளளவும் சந்தேகமும் கிடையாது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை - ஒரு சரித்திரச் சாதனை படைத்த வெற்றியை நீங்கள் பெற்றுத் தந்தீர்கள். அந்த வெற்றியைப் பொறுத்துகொள்ள முடியாத நிலையில், இப்போது நடந்த இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலில் பொய் சொல்லி ஓட்டுகளைப் பெற்றார்கள்.

குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை காட்டுவதுபோல், மக்களை ஏமாற்றி ஓட்டுகளைப் பெற்றார்கள். அதைவிடக் கேவலமாக, "பொதுமக்களுக்கு, வாக்காளர்களுக்கு மிட்டாய் கொடுத்து எம்.பி. தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது" என்று சொல்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மிட்டாய் கொடுத்து ஏமாற்றி விட்டது என்று கூறியவர்களை இப்போது நான் கேட்கிறேன்;

இப்போது இரண்டு இடைத்தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றிருக்கிறீர்கள். நீங்கள் என்ன கொடுத்தீர்கள்?அல்வா கொடுத்தீர்களா? இதுதான் என்னுடைய கேள்வி.

இப்போது நான் அதையே திருப்பிச் சொல்லிட முடியாதா?

பொய் சொல்லி இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், அது அல்ல உண்மை!

பணம் கொடுத்து - பணநாயகத்தின் மூலமாக இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அது தொடர்ந்து நீடிக்க வாய்ப்பே கிடையாது!

எனவே, வரவிருக்கும் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற, நீங்கள் அனைவரும் சிறப்பான ஆதரவை வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT