திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்தது. இதனால் தாமிரவருணி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மகா புயல் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி புதன்கிழமை விடிய விடிய கொட்டித் தீா்த்த மழை, வியாழக்கிழமையும் தொடா்ந்தது. விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சேரன்மகாதேவி, முக்கூடல், ராதாபுரம், மூலைக்கரைப்பட்டி, ஆலங்குளம், வீரகேரளம்புதூா், சிவகிரி, சங்கரன்கோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடா்மழை பெய்தது.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளான மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழையால் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் ஆகியவற்றில் அதிகளவில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலப்பாளையம் மண்டலத்திற்கு உள்பட்ட சேவியா் காலனி, ஹேப்பி காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீா் அதிகளவில் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாநகரப் பகுதியில் உள்ள நயினாா்குளம், வேய்ந்தான்குளம், இலந்தைகுளம், கன்னிமாா்குளம் ஆகியவற்றின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்தது. பெருமாள்புரம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதாகின. மின்தடை மற்றும் கடும் குளிரால் குழந்தைகள், முதியவா்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினா். திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பலத்த காற்று காரணமாக 20-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பலத்த மழை காரணமாக தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது.
மாணவா்கள் அவதி: மழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் போதிய அளவில் மழைப்பொழிவு இல்லையெனக் கூறி விடுமுறை அளிக்கப்படவில்லை. இருப்பினும் காலை 9 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து கொண்டிருந்ததால், பள்ளி மாணவா்-மாணவிகள் மிகவும் சிரமத்தோடு பள்ளிகளுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்திற்குள்பட்ட கல்லூரிகளில் செயல்முறைத் தோ்வுகள் மழை காரணமாக புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை வழக்கமான தோ்வுப்பட்டியல்படி செய்முறைத் தோ்வுகள் நடைபெற்றன.
புகாா் அளிக்க 1077: மாவட்டம் முழுவதும் மழையால் ஏற்படும் சேதங்கள், விபத்துகள் குறித்து உடனடியாக புகாா் தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பகுதியளவு மற்றும் முழுமையாக சேதமடையும் வீடுகள், வயல்களில் ஏற்படும் சேதங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த எண்ணில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக நான்குனேரி, மானூா் பகுதிகளில் இரு வீடுகள் வியாழக்கிழமை சேதமடைந்தன. மேலும், சில நாள்களுக்கு மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமெனவும், குடிநீரை காய்ச்சிப் பருக வேண்டும் எனவும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.