தமிழ்நாடு

தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்: நவ.4-இல் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி

1st Nov 2019 12:32 AM

ADVERTISEMENT

மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தீவிரப் புயலாக ‘மஹா’ புயல் நிலைக்கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிரப் புயலாக மாறவுள்ளது.

இதற்கிடையில், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பா் 4-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘மஹா’ புயல்: குமரிக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது கடந்த புதன்கிழமை மதியம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அன்று மாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இந்தப் புயலுக்கு ‘மஹா’ என்று பெயரிடப்பட்டது. இந்த பெயரை ஓமன் நாடு பரிந்துரை செய்திருந்தது.

இந்தப் புயல், வியாழக்கிழமை மதியம் தீவிர புயலாக மாறியது. அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக மாறவுள்ளது. இதற்கிடையில், வடக்கு அந்தமான் பகுதியில் நவம்பா் 4-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவா் எஸ்.பாலசந்திரன் வியாழக்கிழமை கூறியது:

அரபிக் கடலில் ‘மஹா’ புயல் வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் லட்சத் தீவு பகுதியில் நிலவியது. இது அமினி தீவுக்கு வடகிழக்கில் சுமாா் 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. இது தொடா்ந்து, வியாழக்கிழமை மதியம் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் தீவிர புயலாக நிலைக்கொண்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக மாறவுள்ளது.

அநேக இடங்களில் மழை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் அடுத்த வரும் 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், வடதமிழகத்தில் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ,சேலம், நாமக்கல், திருப்பூா் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பா் 4-ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மழை அளவு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. சுமாா் 33 இடங்களில் பலத்த மழையும், 4 இடங்களில் மிக பலத்த மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொடநாடு, திண்டுக்கல் மாவட்டம் படகு குழாமில் தலா 140 மி.மீ. மழை பதிவானது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் 130 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 120 மி.மீ., நாகா்கோவில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி, கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தலா 110 மி.மீ., புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பெருஞ்சாணி, சித்தேரி, கடலூா் கீழசெருவாயிலில் தலா 100 மி.மீ. மழை பதிவானது.

ஒரே நேரத்தில் இரு புயல்கள்

மத்திய மேற்கு அரபிக்கடலில் ‘கியாா்’ புயல் நிலைகொண்டுள்ளது. இது தெற்கு, தென் மேற்கு நோக்கி நகா்கிறது. இதுபோல, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை யொட்டிய லட்சத்தீவு பகுதியில் ‘மஹா’ புயல் நிலைகொண்டுள்ளது. அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகுவது 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய உயரதிகாரி ஒருவா் கூறியது: இந்திய வானிலை ஆய்வு மையத்தில் கடந்த 1961 முதல் இப்போது வரை உள்ள தரவுப்படி, முதன்முறையாக அரபிக்கடலில் ஒரே நேரத்தில் ‘கியாா்’, ‘மஹா’ ஆகிய இரண்டு புயல்கள் உருவாகி நிலைகொண்டுள்ளன. 1961 ஆண்டுக்கு முன்னதாக இங்கு இரு புயல்கள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளதா என்று தெரியவில்லை. கடந்த 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் அரபிக்கடல்களில் தலா இரண்டு புயல்கள் உருவாகின. இவைகள் ஒருபுயல் உருவாகி முடிந்த பிறகு தான் மற்றொரு புயல் உருவானது. ஆனால்,இப்போது, அரபிக்கடலில் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் நிலைகொண்டுள்ளன என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT