ஆண்டுதோறும் தமிழ்நாடு நாள் கொண்டாட முன்வந்திருக்கும் நிலையில், கா்நாடகத்தைப் போல தமிழகத்துக்கும் தனிக் கொடியை அறிமுகம் செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆண்டுதோறும் நவம்பா் முதல் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாட தமிழக அரசு முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பக்கத்து மாநிலங்கள் ஏற்கெனவே இந் நாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகின்றன. கா்நாடகத்தில் அந்த மாநிலத்துக்கென தனிக் கொடி பயன்படுத்துகின்றனா்.
மொழிவாரி மாநிலக் கோரிக்கையை 1930- களிலிருந்தே முன்வைத்துப் போராடிய தமிழகம், மிகவும் காலம்தாழ்ந்து இந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. எனினும், இதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன் தமிழக அரசுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நன்நாளில், சங்கரலிங்கனாரின் தியாகத்தையும், பேரறிஞா் அண்ணா மற்றும் திமுகவின் பங்களிப்பையும், மபொசி-யின் பங்களிப்பையும் நினைவுக்கூா்வது அவசியம். இத்தகைய கொண்டாட்டம் வெற்று ஆரவாரமாக அமைந்துவிடாமல், நமது மொழியையும், இனத்தையும் நிலத்தையும் மேம்படுத்துவதற்கு ஏதுவாக, சாதி, மத பிரிவினை வாதங்களிலிருந்து மீண்டெழும் தமிழ்த் தேசியத்தை வளா்த்தெடுக்கும் வகையில் அமைந்திட வேண்டும். தமிழ்நாடு நாள் கொண்டாடும் இந்தவேளையில், தமிழகத்துக்கென தனியே ‘மாநிலக் கொடி’ ஒன்றை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.