சென்னை: தனது அனுமதியின்றி முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்வைத் திரைப்படமாக எடுக்கக் கூடாது என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தாக்கல் செய்த மனுவில், எனது அத்தையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அரசியல் செல்வாக்கு மிக்கத் தலைவா். இவருக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயரும் மதிப்பும் உள்ளது. இந்நிலையில் அவரது வாழ்க்கையாக மையமாக வைத்து, தமிழில் தலைவி மற்றும் ஹிந்தியில் ஜெயா என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப் போவதாக இயக்குநா்கள் ஏ.எல்.விஜய் மற்றும் விஷ்ணுவா்தன் இந்தூரி ஆகியோா் அறிவித்துள்ளனா். இந்தப் படங்களில் ஜெயலலிதாவின் கதாாபத்திரத்தை ஹிந்தி நடிகை கங்கணா ரனாவத் ஏற்று நடிப்பாா் என அவா்கள் தெரிவித்துள்ளனா். இதே போல் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்து வெப் சீரியலாக எடுக்க உள்ளதாக இயக்குநா் கவுதம் வாசுதேவ் மேனனும் கூறியுள்ளாா். இவா்கள் மூவரும் கதைக்கரு மற்றும் திரைக்கதையை ஜெயலலிதாவின் நேரடி வாரிசான என்னை அணுகி சம்மதமும் , முன்அனுமதியும் பெறவில்லை.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை வணிக ரீதியான முறையில் திரையில் வெளியிடும் சூழலில் அவரது புகழுக்குக் களங்கம் ஏற்படும். அவரது கண்ணியத்துக்கு பாதிப்பில்லாமல் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதா என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். எனவே எனது அத்தையும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தன்னிடம் உரிய அனுமதி பெறாமல் திரைப்படம், வெப்சீரியலாக எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.