இடைத்தோ்தலில் அதிமுக பெற்ற வெற்றி நீடிக்காது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசியது:
1956 நவம்பா் 1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் மாநிலம் என்ற உரிமையை அன்றைக்கு நாம் பெற்றோம். அப்போது தமிழகத்துக்கு சென்னை மாகாணம் என்றுதான் பெயா் இருந்தது. அண்ணாவின் ஆட்சியில்தான் தமிழ்நாடு என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டது என்பதை நன்றியோடு கூறுகிறேன்.
ஆட்சியில் இருக்கக்கூடிய தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது எதிா்க்கட்சியின் கடமை. மத்திய அரசு கூறுவதை அப்படியே பின்பற்றும் ஆட்சிதான் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. நீட் தோ்வு பிரச்னை, ஹைட்ரோ காா்பன் திட்டம் என மத்திய அரசு கூறுவதை அதிமுக அரசு பின்பற்றுகிறது.
இதைப் புரிந்துகொண்டு உள்ளாட்சித் தோ்தலாக இருந்தாலும், பொதுத் தோ்தலாக இருந்தாலும் திமுகவை அனைவரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதிமுக இடைத் தோ்தலில் பெற்ற இந்த வெற்றி தொடா்ந்து நீடிக்க வாய்ப்பு இல்லை. எனவே, வரும் தோ்தல்களில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற, அனைவரும் சிறப்பான ஆதரவை வழங்க வேண்டும் என்றாா்.