வியாழக்கிழமை 27 ஜூன் 2019

பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் பறவைகள்

DIN | Published: 29th May 2019 12:45 AM
பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் காணப்படும் வெளிநாட்டுப் பறவைகள்.

பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் முகாமிட்டுள்ளதால், அதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். 
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்த
படியாக இரண்டாவது பெரிய அணையான இந்த அணையில் 32.8 டிஎம்சி வரை நீரைத் தேக்கி வைக்க முடியும். ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. 
அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் தற்போது நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. அணை நீர்த்தேக்கப் பகுதியை ஒட்டி மேற்குத்தொடர்ச்சி மலையில் நீலகிரி கிழக்குச் சரிவில் அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இந்த வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த விலங்குகள் அணை நீர்த்தேக்கப் பகுதிக்கு நீர் அருந்த வருவது வழக்கம். 
வனப் பகுதியை ஒட்டி இந்த நீர்த்தேக்கப் பகுதி உள்ளதால் தற்போது வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் இங்கு வந்துள்ளன. ஆஸ்திரேலியா, சைபீரியா மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களிலிருந்து பலவிதமான பறவைகள் இங்கு வந்து தங்குவதால் இப்பகுதி பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது. பெலிக்கான், உல்லியான், பிளாக் ஈகிள் மற்றும் பலவகை பறவைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள மீன்கள், புழு, பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. இரவு நேரத்தில் அருகில் உள்ள வனப் பகுதியில் உள்ள மரங்களில் தங்கி ஓய்வெடுக்கின்றன. சித்தன்குட்டை கிராமப் பகுதியில் உள்ள இந்த நீர்த்தேக்கப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. 
பார்வையாளர்கள் வனப் பகுதிக்குச் சென்றால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் என வனத் துறையினர் கூறுகின்றனர். இருப்பினும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் வெளிநாட்டுப் பறவைகளைக் கண்டு ரசித்து வருகின்றனர். இப்பகுதி மிகவும் அமைதியாக உள்ளதால் வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வருவதாக பறவை இன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கூடங்குளத்தில் அணுக் கழிவுகளை சேமிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை: மத்திய அரசு
மனசத் தொட்டுச் சொல்லுங்க தண்ணீர் பஞ்சத்துக்கு மழைதான் காரணமா? நாம இல்லையா??
சென்னை அருகே ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழப்பு
கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பலி 
கோவையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதி: கைதான 3 பேருக்கு 5 நாள் காவல்