முதல் தேர்தலில் முத்திரை பதித்த மக்கள் நீதி மய்யம்: கொங்கு மண்டலத்தில் 4 தொகுதிகளில் மூன்றாமிடம்

கொங்கு மண்டலத்தில் ஐந்தில், நான்கு தொகுதிகளில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் மூன்றாமிடம் பிடித்து முத்திரைப் பதித்துள்ளனர். 
முதல் தேர்தலில் முத்திரை பதித்த மக்கள் நீதி மய்யம்: கொங்கு மண்டலத்தில் 4 தொகுதிகளில் மூன்றாமிடம்

கொங்கு மண்டலத்தில் ஐந்தில், நான்கு தொகுதிகளில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் மூன்றாமிடம் பிடித்து முத்திரைப் பதித்துள்ளனர். 

குறிப்பாக கோவை தொகுதியில் அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளனர்.  கடந்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி மதுரையில் நடிகர் கமல்ஹாசன் "மக்கள் நீதி மய்யம்' என்ற தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தி ரஜினிகாந்துக்கு முன்னதாக அரசியலில் தடம் பதித்தார். நடுநிலை, மதச்சார்பின்மை ஆகியவை தங்களது கட்சியின் கொள்கைகளாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.  

ரஜினிகாந்துக்கு முன்னதாக கட்சியைத் தொடங்கியதால் இளைஞர்கள் மத்தியில் கமல்ஹாசனுக்கு வரவேற்பு அதிகரித்தது. இந்நிலையில் தனது கட்சி சார்பில் மக்களவைத் தேர்தல், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை களமிறக்கியது. தமிழகத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் பெரும்பாலும் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை எதிர்பார்த்திருந்த நேரத்தில் கமல்ஹாசன் தனது கட்சியைத் தொடங்கி, தேர்தலில் களம் கண்டது அவருக்குச் சாதகமாக அமைந்தது.  

இதேபோல பொள்ளாச்சி பாலியில் சம்பவத்தை வெளிக்கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்த ஆர்.மூகாம்பிகா பொள்ளாச்சித் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அத்தொகுதிப் பெண்களிடம் போதிய ஆதரவு இருந்தது. இதேபோல திருப்பூரில் சமூகப் பணிகளைச் செய்து வந்த பின்னலாடை நிறுவன உரிமையாளர் வி.எஸ்.சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திருப்பூர் வாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவராக இருந்ததால் அவருக்கும் மக்களிடையே போதிய வரவேற்பு இருந்தது. நீலகிரி தொகுதியில் மக்கள் பிரச்னைகளுக்காக பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடுத்து வாதாடிய வழக்குரைஞர் என்.ராஜேந்திரனும், ஈரோட்டில் ஏ.சரவணகுமார் ஆகியோரும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். 

பிரசாரத்தின் முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் அனைவரும் உற்சாகம் குறையாமல் களப்பணியாற்றினர். இதில் கிராமப்புறப் பகுதிகளை விட நகரங்களில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு மக்களிடையே ஆதரவு அதிகளவில் இருந்தது. அதிலும் குறிப்பாக கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன், தொகுதிக்குட்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் வாகனப் பிரசாரங்களை மேற்கொள்ளாமல் மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்குச் சேகரித்தார். இதுபோன்று மக்களை நேரடியாகச் சந்தித்துப் பிரசாரம் செய்வதன் மூலம் அவர்களது தேவைகளை உணர முடியும் என ஆர்.மகேந்திரன் பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தார்.

இந்தத் தேர்தலில் அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் இடையே கடும் போட்டி நிலவும் என தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் அனைத்தும் கருத்துக் கணிப்புகளுக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் அமைந்திருந்தது. கொங்கு மண்டலத்தில் ஈரோடு தொகுதியில் மட்டும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட குறைவான வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஏ.சரவணகுமார் நான்காமிடம் பிடித்தார்.  மற்ற நான்கு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி, மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் மூன்றாமிடம் பிடித்து முத்திரைப் பதித்தனர்.

கோவையில் போட்டியிட்ட கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் 1 லட்சத்து 44 ஆயிரத்து 829 வாக்குகளை (12 சதவீதம்) பெற்று மூன்றாமிடம் பிடித்தார். பொள்ளாச்சியில் போட்டியிட்ட ஆர்.மூகாம்பிகா 59,693 வாக்குகள் பெற்று அத்தொகுதியில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். திருப்பூரில் போட்டியிட்ட வி.எஸ்.சந்திரகுமார் 64,657 வாக்குகளையும், ஈரோட்டில் ஏ.சரவணகுமார் 47,719 வாக்குகளையும், நீலகிரியில் என்.ராஜேந்திரன் 41,169 வாக்குகளையும் பெற்றுள்ளார். "கோவை தொகுதியில் இரு பெரும் கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட்டு 1.45 லட்சம் வாக்குகள் பெற்றிருப்பது கூடுதல் பலத்தை அளிக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது இதன்மூலம் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  

இந்தத் தேர்தல் முடிவுகள் அளித்திருக்கும் உத்வேகத்துடன் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் மேலும் தீவிரமாகச் செயல்பட்டு எங்களது பலத்தை நிரூபிக்க உள்ளோம்' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com