சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை, அறிவியல்  கல்லூரியில் நடைபெற்றது. சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஜயங்கொண்டம், அரியலூர், குன்னம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இங்கு எண்ணப்பட்டன.

காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.   முதல் சுற்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 25,323 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர் 24270 வாக்குகளும் பெற்றனர். இதில் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகரைவிட 1,053 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.

இரண்டாவது சுற்றில் அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர் 49,149 வாக்குகளும், விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் 47,058 வாக்குகளும் பெற்றனர். இதில் தொல்.திருமாவளவனைவிட அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர் 2,091 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.  தொடர்ந்து 9 சுற்றுகளிலும் அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். 10-ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர் 2,38,717 வாக்குகளும், விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் 2,40,979 வாக்குகளும் பெற்றனர்.

இதில் சந்திரசேகரை விட 2,262 வாக்குகள் கூடுதல் பெற்று திருமாவளவன் முன்னிலை வகித்தார்.   அதனைத் தொடர்ந்து 11 சுற்று முதல் 18-ஆவது சுற்றுவரை விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவனும், அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகரும் மாறி மாறி கணிசமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தனர். 20- ஆவது சுற்றுவரை தொடர்ந்து இருவருக்கும் இழுபறி நிலையே நிடித்தது.   இந்த நிலையில் 21-ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,82,815 வாக்குகளும், தொல்.திருமாவளவன் 4,90,150 வாக்குகளும் பெற்றனர்.

திருமாவளவன் 7,335 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.  22ஆவது சுற்று முடிவில் சந்திரசேகரன் 4,89,196 வாக்குகள் பெற்றார். இந்த சுற்றில் தொல்.திருமாவளவன் 4,94,686 வாக்குகள் பெற்று 5,490 வாக்குகள் முன்னிலை வகித்தார்.  23-ஆவது சுற்று முடிவில் தொல்.திருமாவளவன் 4,97,211 வாக்குகளும், சந்திரசேகர் 4,94,527 வாக்குகளும் பெற்றனர். இந்தச் சுற்றில் 2,684 வாக்குகள் வித்தியாசத்தில் தொல். திருமாவளவன் முன்னிலை வகித்தார். 24-ஆவது சுற்றிலும் திருமாவளவன் முன்னிலை வகித்தார்.

இறுதிச் சுற்றான 25-ஆவது சுற்றில் தொல்.திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,97,010 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் தொல்.திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com