திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிமுகம்

DIN | Published: 24th May 2019 05:08 AM

மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி முகம் காட்டி திமுக கூட்டணி சாதனை படைத்துள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அந்தக் கூட்டணி பெற்றுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி முகம் காட்டியுள்ளது.
பிற தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கனிமொழி (தூத்துக்குடி), முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), தயாநிதி மாறன் (வடசென்னை), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), ஆ.ராசா (நீலகிரி) ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு மிகப்பெரிய அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸýக்கு கணிசமான வெற்றி: இதேபோன்று, திருநாவுக்கரசர் (திருச்சி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), வசந்தகுமார் (கன்னியாகுமரி), செல்லக்குமார் (கிருஷ்ணகிரி) என காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்டவர்களில் 9 பேரில் 8 பேர்  மக்களவைக்குச் செல்வது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 23) எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அரை மணி நேரத்திலேயே முதல் சுற்றுக்கான முடிவுகள் வெளி வரத் தொடங்கின. முதலில் நாமக்கல் தொகுதிக்கான முடிவு வெளியானது. அதில், திமுக முன்னிலை பெற்றது. இதேபோன்று, தூத்துக்குடி, வடசென்னை என அடுத்தடுத்து தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகின.
தென்சென்னை, திருவள்ளூர் தொகுதிகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சில நிமிடங்கள் தாமதமானது.  கோவை தொகுதியில் முதல் சில சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து வந்தார். அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் அவர் பின்தங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னிலை பெற்றார். இதேபோன்று, தேனியைத் தவிர்த்து அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே முன்னிலை வகித்தது. 
வெற்றி அறிவிப்பு: மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் உள்ள 5 வாக்குச் சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இரவு 7.30 மணி நிலவரப்படி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 2.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா 2.05 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
எந்த வேட்பாளர்கள் அதிகம்: தமிழகத்திலேயே திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.வேலுசாமி, பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை விட 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிக் கோட்டை எட்டினார்.  இதற்கு அடுத்து, திருச்சி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை விட 4.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதேபோன்று, வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4.4 லட்சத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்று தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
3 லட்சத்துக்கும் மேல்...:அரக்கோணம், மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதர தொகுதிகளில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் வெற்றியைப் பெற்றன.
1 லட்சத்துக்கும் குறைவாக...: சிதம்பரம், தேனி, தருமபுரி ஆகிய தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கும், அதிமுக வேட்பாளர் பி.சந்திரசேகருக்கும் இடையே வாக்கு வித்தியாசத்தில் ஏற்ற, இறக்கங்கள் இருந்து கொண்டே இருந்தன. 
தோல்வி முகத்தில் பொன். ராதாகிருஷ்ணன்: கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் இம்முறை அத்தொகுதியை தக்க வைக்க முடியவில்லை. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹெச். வசந்தகுமாரை காட்டிலும் சுமார் 2.30 லட்சம் வாக்குகள் பின்தங்கி வெற்றி வாய்ப்பை இழந்தார்.
ஆறுதல் வெற்றி: ஆளும் கட்சியான அதிமுக தேனி மக்களவைத் தொகுதியில் மட்டுமே வெற்றி முகம் காட்டியது. அந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இதேபோன்று, தருமபுரி மக்களவைத் தொகுதியில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பின்தங்கினார். அந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில்குமார் முன்னிலை பெற்றார். பல தொகுதிகளில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றன. இதனால், முழுமையான முடிவுகள் வெள்ளிக்கிழமை காலையிலேயே தெரியவரும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


திமுக அணி 
வெற்றிமுகம் 
காட்டிய தொகுதிகள்

திமுக    23/23
காங்கிரஸ்    8/9
வி.சி.க.    1/1
மார்க்சிஸ்ட்    2/2
இந்திய கம்யூ.    2/2
முஸ்லிம் லீக்    1/1

அதிமுக    1/20
(தேனி)
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வட மாநிலங்களில் தமிழ் கற்றுத்தர அமித் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் க.பாண்டியராஜன்
நாடாளுமன்றக் குழு எச்சரிக்கையையும் மீறி அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பி.க்கள்
ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வு: செப்.18 முதல் அமல்
மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி 
கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்