திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

குற்றாலத்தில் அதிநவீன கருவிகளுடன் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படுமா?

By திருநெல்வேலி| DIN | Published: 24th May 2019 08:19 AM

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் தீயணைப்புத் துறை சார்பில் அதிநவீன கருவிகளுடன் கூடிய மீட்பு பணிகள் நிலையம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்டவற்றில் குளிப்பதற்காக ஆண்டுதோறும் சுமார் 1 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக, ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான சீசன் நேரத்தில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்து குளித்து மகிழ்கிறார்கள். இதேபோல் ஐப்பசி முதல் சபரிமலை மகரஜோதி வரை ஏராளமான பக்தர்கள் குற்றாலத்தில் குளித்துச் செல்கிறார்கள்.

சீசன் நேரங்களில் குளிக்க வருபவர்களுக்கு காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது பேரருவி தடாகத்தில் தவறி விழுபவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு வருகிறார்கள். எனினும் குற்றாலத்தில் தனியாக மீட்புப் பணிகள் நிலையம் இல்லாததால், தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தைச் சேர்ந்த வீரர்களே குற்றாலம் வந்து மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனவே, குற்றாலத்தில் அதிநவீன கருவிகளுடன் கூடிய தனி மீட்பு பணிகள் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது அதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.  இது தொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: குற்றாலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக  தனியாக மீட்பு பணிகள் நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அந்த மீட்பு பணிகள் நிலையத்தில் அதிநவீன மீட்பு கருவிகள், அவசரகால மீட்பு ஊர்தி, அதிநவீன மின் விளக்குகள், கவச உடை (லைஃப் ஜாக்கெட்), ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவிகள், தண்ணீரில் குதித்து காப்பாற்ற உதவும் டைவிங் சூட்,  பாம்பு பிடிக்கும் கருவி, காட்டாற்று வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க உதவும் பிளைட் ரோப் போன்ற கருவிகள் இருக்கும்.

மேலும் இந்த நிலையத்தில் இடம்பெறும் வீரர்கள் நன்கு நீச்சல் தெரிந்தவர்களாகவும், மலையேறும் பயிற்சி பெற்றவர்களாகவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப உத்திகளை அறிந்தவர்களாகவும் இருப்பார்கள். விபத்து ஏற்பட்டாலோ, மரங்கள் சாய்ந்தாலோ உடனடியாக அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். அதனால் குற்றாலத்தில் தனி மீட்பு பணிகள் நிலையம் அமைப்பதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் பூர்வாங்க பணிகள் தொடங்கப்படும். தற்போதைய நிலையில், தமிழகத்தில் ஒகேனக்கல்லில் மட்டுமே அதிநவீன மீட்பு பணிகள் நிலையம் உள்ளது என்றார் அவர்.  

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தங்கம் விலை நிலவரம்: இன்று ஏறுமுகமா? இறங்குமுகமா? 
பெண் வயிற்றில் இருந்து 7 கிலோ கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: 8 போ் கொண்ட கும்பல் கைது
அடையாள மொழியாக இந்தி இருக்க முடியாது: ராமதாஸ் பேட்டி
திமுகவால் இனி அதிமுகவை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்