சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

அமமுகவை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர் கட்சி: வாக்கு சதவீதமும் கணிசமாக உயர்வு

By கோயம்புத்தூர்| DIN | Published: 24th May 2019 08:11 AM

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவில் பெரும்பாலான தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பின்னுக்குத் தள்ளியுள்ளனர். அக்கட்சியின் வாக்கு சதவீதமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

 நாம் தமிழர் கட்சி கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் சீமானால் தொடங்கப்பட்டது. தமிழ் தேசியம், விவசாயம், நீர்மேலாண்மைக்கு இக்கட்சி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக இக்கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 1.1 சதவீத வாக்குகளைப் பெற்றது.  அதைத் தொடர்ந்து தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் தமிழகம், புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டுள்ளது.

இதில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 20 பேர் பெண்கள் ஆவர்.  மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் அமமுகவை பின்னுக்குத் தள்ளியுள்ளனர். சில இடங்களில் 3, 4ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.  கோவை தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் 60 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

முந்தைய தேர்தலைக் காட்டிலும் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக இக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக எஸ்.கல்யாணசுந்தரம் கூறியதாவது:  நாம் தமிழர் கட்சி கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 1.1 சதவீதம் வாக்குகள் பெற்றது. அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் 2 சதவீதமாக வாக்குகள் உயர்ந்தன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் சராசரி வாக்கு சதவீதம் 5 ஆக உயர்ந்துள்ளது.  

சிவகங்கை, தஞ்சாவூர், நாகை, திருச்சி, காஞ்சிபுரம் உள்பட பல மாவட்டங்களில் சிறப்பான வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது. கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பும், சிறந்த வாக்கு வாங்கியும் உள்ளது.  எங்களின் வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் சீரான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரியளவில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை: சீன பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்
அடுத்த 3 நாள்களுக்கு மழை தொடர வாய்ப்பு
சிறுமிக்கு சித்ரவதை: நடிகை பானுப்பிரியா மீது வழக்கு
சிக்கலான விஷயத்துக்குக்கூட சுலபமாக தீர்வு கண்டவர் ஜி.நாராயணசுவாமி: எஸ். குருமூர்த்தி