ஊக்க மருந்து விவகாரம்: கோமதியின் சகோதரர் மறுப்பு

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகாருக்கு, அவரது சகோதரர் சுப்பிரமணி


ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகாருக்கு, அவரது சகோதரர் சுப்பிரமணி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முடிகண்டம்  கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து- ராசாத்தி தம்பதியின் மகள் கோமதி (30). மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்த கோமதி அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்காத, மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர். கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவர், ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து முடிகண்டத்தில் உள்ள கோமதியின் குடும்பத்தினர் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கோமதியின் சகோதரர் சுப்பிரமணி கூறியது: ஏழைக் குடும்பத்தில் பிறந்த கோமதி, தனது தளராத முயற்சியால் ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இதன்பிறகே முடிகண்டம் கிராமம் இந்தியா முழுவதும் பிரபலமானது.  எங்களது கிராம மக்கள் மட்டுமல்லாது, தமிழக மக்கள் அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாடிவரும் நிலையில், திடீரென ஊக்க மருந்து பயன்படுத்தியதாகத் திட்டமிட்டு பொய்த் தகவலை சிலர் பரப்புகின்றனர்.
என் சகோதரி எந்த தவறும் செய்யவில்லை. ஆசிய தடகளத்தில் பங்கேற்ற பிறகு திருச்சி விமான நிலையம் வந்திறங்கியபோதே அவரது காதில் துளைகள் இருந்ததை அனைவரும் பார்த்தனர். இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியபோது திருச்சியில் இரு மருத்துவர்கள், சென்னை மற்றும் பெங்களூரில் தலா ஒரு மருத்துவரிடம் பரிசோதனை செய்தார்.  அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற கனவுடன் பயிற்சியில் ஈடுபட்டவரை, வேதனையில் ஆழ்த்தும் வகையில் இந்த விவகாரம் வதந்தியாக திட்டமிட்டு பரப்பப்படுகிறது. சக போட்டியாளர்கள் யாரேனும் பொறாமையில் திட்டமிட்டு இந்த புகாரை எழுப்பியிருக்கலாம். இதுதொடர்பாக, தடகளச் சங்கத்திலும், தமிழக அரசிடமும் முறையிட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அரசு விளக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, அரசு உரிய பதில் அளிக்கும் என நம்புகிறோம். மேலும், சட்டப்பூர்வமாகவும் இந்த விவகாரத்தை சந்திக்க எனது சகோதரி தயாராகி வருகிறார். ஊக்க மருந்து பயன்படுத்த வேண்டும் என்றால், கடந்த 12 ஆண்டுகளில் எத்தனையோ முறை பயன்படுத்திருக்கலாம். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றிருக்க முடியும். ஆனால், நேர்மையாக விளையாடி இத்தகைய நிலையை அடைந்துள்ளார்.  ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என சட்டப்பூர்வமாக அறிவிக்கச் செய்து, இந்த விவகாரத்திலும் கோமதி வெற்றி பெறுவார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com