வியாழக்கிழமை 27 ஜூன் 2019

அமெரிக்க பேஸ் மேக்கர் கருவிகளின் தரத்தில் குறைபாடு: மத்திய அரசு எச்சரிக்கை

DIN | Published: 22nd May 2019 02:47 AM


இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் பேஸ் மேக்கர் கருவிகள் தரமாக இல்லை என புகார் எழுந்துள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிவிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மெட்ரானிக் என்ற நிறுவனம், கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 2.66 லட்சத்துக்கும் அதிகமான பேஸ் மேக்கர் கருவிகளை விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட இதய நோயாளிகள் அக்கருவிகளை பொருத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மெட்ரானிக் நிறுவனம் தயாரித்த சில வகையான பேஸ் மேக்கர் கருவிகளின் பேட்டரிகளில் விரைவாக சார்ஜ் இழந்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த அமெரிக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அந்த வகை சாதனங்கள் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்தது. இந்த நிலையில், இந்தியாவிலும் அக்கருவிகளை பயன்படுத்துவோர் இருப்பதால், அமெரிக்காவின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. அதனுடன் அமெரிக்க தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மும்பையில் உள்ள மெட்ரானிக் நிறுவனத்தின் இந்தியப் பிராந்தியத்துக்கான பிரதிநிதி, தினமணி நிருபரிடம் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளில் பல லட்சம் பேஸ் மேக்கர் கருவிகளை நாங்கள் உலகம் முழுவதும் விநியோகித்திருக்கிறோம். அவற்றில் வெறும் 3 கருவிகளில்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் அதுவும் இல்லை. 
எனவே, சம்பந்தப்பட்ட பேஸ் மேக்கர் கருவிகளை சந்தையில் இருந்து திரும்பப் பெற வேண்டிய அவசியம் இல்லை. இதுதொடர்பாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம் என்றார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறை
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.: ஜூன் 29-இல் பட்டமளிப்பு விழா 
போக்குவரத்துத் துறையில் 400 புதிய பேருந்துகள் விரைவில் இயக்கம்
சட்டவிரோத பேனர்: வழக்கு நிலுவையில் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்
சமூக ஊடகங்களில் அவதூறு: காவல் ஆணையரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்