5 ஆண்டுகளாக 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதம்

தமிழகத்திலுள்ள 300-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர் தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பது  தெரியவந்திருக்கிறது.
5 ஆண்டுகளாக 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதம்

தமிழகத்திலுள்ள 300-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர் தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பது  தெரியவந்திருக்கிறது.

இதற்கு, போதிய உள்கட்டமைப்பு வசதிகள், தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், ஆய்வக வசதி போன்றவை இல்லாததே  முக்கியக் காரணங்கள். எனவே, பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த விவரங்களை அறிந்து, பொறியியல் கல்லூரி குறித்து தீர ஆராய்ந்த பிறகே கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யவேண்டும் என எச்சரிக்கின்றனர் கல்வியாளர்கள். கல்லூரி முன்னாள் மாணவர்களிடம் விசாரிப்பது, கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் தகுதி உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளை மாணவர்களும், பெற்றோரும் தேர்வு செய்கின்றனர். இந்தக் காரணிகளில் முக்கியப் பங்கு வகிப்பது பொறியியல் கல்லூரியின் மாணவர் தேர்ச்சி விகிதம்.

எனவே, பொறியியல் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக, மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொறியியல் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரத்தை வெளியிட உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், இந்தப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு வந்தது. இப்போது 2019-20 -ஆம் கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், 2014 முதல் 2018-ஆம் ஆண்டு வரையில் 5 ஆண்டுகளுக்கான  மாணவர் தேர்ச்சி விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதில், ஒவ்வொரு ஆண்டின் நவம்பர்-டிசம்பர் மாத பருவத் தேர்வின் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளாக 300-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர் தேர்ச்சி விகிதம் இருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், ஆண்டுக்கு ஆண்டு மாணவர் தேர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறைந்து வருவதும், ஒருவர் கூட தேர்ச்சி பெறாத பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஒற்றை இலக்கத்தில் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியது:

பொறியியல் படிப்புகளில் சேரப்போகும் மாணவர்களுக்கு, இந்த மாணவர் தேர்ச்சி விகிதம் குறித்த தகவல் மிகுந்த பயனுள்ள தகவல்தான். ஆனால், இதை மட்டுமே அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரு பொறியியல் கல்லூரியை எடைபோட்டு விட முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக 30 முதல் 40 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே மாணவர்  தேர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. 

அதற்கு முக்கியக் காரணம், இந்த பொறியியல் கல்லூரிகள் பிளஸ் 2 தொழில் பிரிவு படித்து வரும் மாணவர்களையோ, பாலிடெக்னிக் முடித்து நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் சேரும் மாணவர்களையோ சேர்ப்பதே இல்லை.

ஆனால், இந்த இரண்டு பிரிவு மாணவர்களையும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பொறியியல் கல்லூரிகள் சேர்த்துக்கொள்கின்றனர். இந்த மாணவர்கள் பள்ளியில் கணிதப் பாடம் படிக்காத காரணத்தால், பொறியியல் படிக்கும் போதும் இவர்களுக்கு கணிதம் கடினமாகிவிடுகிறது. அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகம் இப்போது கேள்வித் தாள் தயாரிப்பில் தரத்தை மேம்படுத்தியிருப்பதும், தேர்வுத்தாள் திருத்தும் நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதும் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு முக்கியக் காரணங்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com