உள்கட்டமைப்பு வசதியின்மை: நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 92 பொறியியல் கல்லூரிகளின் விவரம் வெளியிடப்படுமா?

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் நடவடிக்கைக்கு உள்ளான 92  பொறியியல் கல்லூரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்படுமா
ஜெயபிரகாஷ் காந்தி
ஜெயபிரகாஷ் காந்தி


மாணவர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு
போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் நடவடிக்கைக்கு உள்ளான 92  பொறியியல் கல்லூரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, அந்தந்த இணைப்பு பல்கலைக்கழகங்கள் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அனுமதி அல்லது அனுமதி புதுப்பிப்பு பெறவேண்டும். இந்த அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பாக, பல்கலைக்கழகக் குழு ஒவ்வொரு பொறியியல் கல்லூரிகளிலும் ஆய்வு நடத்தி, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில் மாணவர்-ஆசிரியர் (1:20) விகிதாசாரம், ஆய்வகங்கள், கணினி எண்ணிக்கை, அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், பேராசிரியர்களின் கல்வித் தகுதி என்பன உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்யும்.இந்த வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாத கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். முறையான விளக்கம் அளிக்காத அல்லது குறைகளை நிவர்த்தி செய்யாத கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கும். 
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகம், முதல் கட்டமாக 250 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது. இதில், குறைகளைப்பூர்த்தி  செய்த 158 கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை பல்கலைக்கழகம் வழங்கியது. ஆனால், குறைகளை பூர்த்தி  செய்யாத 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை பொறியியல் படிப்புகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகம் அதிரடியாக குறைத்தது. மேலும், இந்தக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாக தடை விதித்துள்ளது. இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு உள்ளான 92 பொறியியல் கல்லூரிகளின் விவரங்களை மாணவர்கள் நலன் கருதி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர்  சங்கத்தின் தலைவர் கே.எம். கார்த்திக் சார்பில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், பொது தகவல் அதிகாரி ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில்,  நடப்பாண்டுக்கான(2019-20)  பொறியியல் மாணவர் சேர்க்கை நெருங்கி வரும் நிலையில், பல்கலைக்கழகம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் மாணவர்களுக்கு போதுமானதாக இருக்காது. இது, பொறியியல் கல்லூரிகள் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவதற்கே வழிவகுக்கும். எனவே, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-இன் அடிப்படையில், உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு ஆளான 92 பொறியியல் கல்லூரிகளின் முழு விவரங்களையும் பொது வெளியில் தெரியப்படுத்துவது கட்டாயமாகும். கல்லூரிகளின் பெயர், தலைவர், முதல்வர் ஆகியோரின் பெயர், முகவரி, எந்தெந்த படிப்புகளில் சேர்க்கை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிடவேண்டும். அப்போதுதான் மாணவர்களும், பெற்றோரும் தொடர்ந்து ஏமாறாமல் இருக்க முடியும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிப்படைத்தன்மை மிக அவசியம்: இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ்காந்தி கூறுகையில், இது பொறியியல் படிப்புகளில் சேரப் போகும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம். முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளும், தரமான முழுக் கல்வித் தகுதியுடைய பேராசிர்களையும் கொண்ட கல்லூரிகள் மூலம்தான் தரமான பொறியாளரை உருவாக்க முடியும். எனவே, அண்ணா பல்கலைக்கழகம் வெளிப்படைத்தன்மையோடு, உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகளால்  நடவடிக்கைக்கு உள்ளான 92 பொறியியல் கல்லூரிகளின் முழு விவரங்களை பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடுவது மிக அவசியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com