இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க காலக் கெடு நீட்டிக்கப்படுமா?

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க காலக் கெடு நீட்டிக்கப்படுமா?


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் கட்டணம் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சில பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்தாலும் அவர்களிடம் பல்வேறு கட்டணங்களைப் பெறுவதாக புகாரும் இருந்து வருகிறது. மேலும் சில பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தவில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. 
இந்நிலையில் இந்தக் கல்வி ஆண்டில் எல்கேஜி மாணவர்களைச் சேர்க்க அரசு கல்வித் துறை இணையதளத்தில் 1-8- 2014 முதல் 8-8- 2015-தேதிக்குள் பிறந்த குழந்தைகளுக்கு சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
ஆனால் அரசு கல்வித் துறை அறிவித்த குறிப்பிட்ட தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு சேர்க்கையில் குழப்பங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக, 2015 ஜூலையில் பிறந்த குழந்தைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. 
பொள்ளாச்சியைச் சேர்ந்த ஸ்டாலின், ரஞ்சித் ஆகிய இருவர் 2015 ஜூலையில் பிறந்த தங்களது குழந்தைகளைச் சேர்க்க முடியாமல் அவதிப்பட்டனர். இ-சேவை மையங்கள், உதவி  தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார வள மையம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், ஆன்லைன் பதிவில் ஏற்பட்ட குழப்பத்தால் பெற்றோர்கள் இந்த அலுவலகங்களுக்கு அலைந்தனர். எங்கேயும் விண்ணப்பிக்க முடியாமல் அவதி அடைந்தனர்.  
 இந்நிலையில், மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் பெற்றோருடன் சென்று பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் இதுகுறித்து வியாழக்கிழமை முறையிட்டனர்.  
அதிகாரிகள் கூறிய பதில் திருப்தி அளிக்காததால் பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.   சென்னையில் உள்ள பள்ளி கல்வித் துறை அலுவலகத்தை 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, 2015 ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை உள்ள காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட பெற்றோர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், ஆன்லைன் குழப்பத்தால் தமிழகம் முழுவதும் பல மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் பயன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே விண்ணப்பிக்க கடைசித் தேதி மே 18  என்பதை மேலும் நீட்டிப்பதோடு, ஆன்லைனில் உள்ள குழப்பத்தையும் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இந்தக் குழப்பத்தை சரி செய்யாமலும், காலநீட்டிப்பு செய்யாமலும் வியாழக்கிழமை மதியத்துக்கு மேல்  மாணவர்கள் சேர்க்கைக்காக அறிவிக்கப்பட்டிருந்த மாணவர்களின் பிறந்த தேதியை தற்போது 2015 ஆகஸ்ட் 1 முதல் 2016 ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை பிறந்த குழந்தைகளை சேர்க்கலாம்  என மாற்றியுள்ளனர்.  
கல்வித் துறை இணையதளத்தில் 2016 ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை பிறந்த குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என வியாழக்கிழமை தெரிவித்துள்ளது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் 2016 ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு வயது இரண்டே முக்கால்தான் ஆகும். 
அரசு விதிமுறைப்படி மூன்று வயதான குழந்தைகளுக்கு மட்டுமே எல்கேஜியில் பள்ளியில் சேர்க்க முடியும் என்ற  நிலை உள்ளபோது, இரண்டேமுக்கால் வயதான குழந்தை வரை விண்ணப்பிக்கலாம் என கல்வித் துறை இணையதளத்தில் புதிதாக அறிவித்துள்ளது சாத்தியமான ஒன்றாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
இதுகுறித்து மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த கண்ணுச்சாமி கூறியதாவது:
குறிப்பிடப்பட்ட தேதியில் பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்தால் அது பதிவேற்றம் ஆவதில்லை. கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள கூறினர். சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டால் அங்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறுகின்றனர். 
இதனால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு, இணையதள தவறை சரிசெய்து விண்ணப்பிக்க இரண்டுநாள் கால அவகாசமே உள்ளதால் மேலும் ஒரு வாரம் கால நீட்டிப்பு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், ஆன்லைன் பிரச்னை வியாழக்கிழமை சரியாகிவிட்டது.  2014-இல் பிறந்து ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களின் குழந்தைகளுக்கு இன்று தேதி மாற்றப்பட்டதால் பாதிப்பு இருக்காது. 
தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளதால் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு இருக்குமா என்பது குறித்து சென்னையில்தான் கேட்கவேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com