வேட்டவலம் ஜமீன் கோயிலில் திருடப்பட்ட மரகதலிங்கம் குப்பைத் தொட்டியில் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம்,  வேட்டவலம் ஜமீன் கோயிலில் திருடப்பட்ட மரகதலிங்கம், குப்பைத் தொட்டியில் மீட்கப்பட்டது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டம்,  வேட்டவலம் ஜமீன் கோயிலில் திருடப்பட்ட மரகதலிங்கம், குப்பைத் தொட்டியில் மீட்கப்பட்டது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டவலத்தில் ஜமீனுக்குச் சொந்தமான மனோன்மணீயம் அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்த ரூ. 8  கோடி மதிப்பிலான சுமார் 500 ஆண்டுகள் பழமையான அரை அடி உயர மரகதலிங்கமும், அதனுடன் இருந்த தங்க நகைகளும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி திருடப்பட்டன. 
இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கடந்த 2018-இல் மாற்றப்பட்டது. இதுதொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வேட்டவலத்தில் முகாமிட்டு  விசாரித்து வந்தனர்.
குப்பைத் தொட்டியில் சிலை:  மரகதலிங்கம் திருடப்பட்டது தொடர்பாக, வேட்டவலத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் உள்பட பலரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில்,  ஜமீன் பங்களாவில் உள்ள  குப்பைத் தொட்டியில் திருடப்பட்ட மரகதலிங்கம் கிடப்பதாக, ஜமீன் பணியாளர் பச்சையப்பன் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தார்.
 தகவலறிந்த வேட்டவலம் போலீஸாரும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று மரகதலிங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன்மாணிக்கவேலும் வேட்டவலத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
வழக்கின் குற்றவாளியை போலீஸார் நெருங்கி வந்த நிலையில், மரகதலிங்கம்  குப்பைத் தொட்டியில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலைத் திருட்டில் ஈடுபட்ட நபரே போலீஸாருக்கு பயந்து, அதைக் குப்பைத் தொட்டியில் வீசியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக ஜமீன் ஊழியர்கள், நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட மரகதலிங்கம், ஏற்கெனவே கடந்த 1987-இல் திருடப்பட்டு, மீண்டும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com