தொழில்நிறுவன ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கு மாணவர் சேர்க்கை: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

 தொழில்நிறுவன கூட்டமைப்பு  திட்ட ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


 தொழில்நிறுவன கூட்டமைப்பு  திட்ட ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக 4 துறைகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. 
வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான சேர்க்கை, தொழில்நிறுவன கூட்டமைப்பு திட்ட ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான சேர்க்கை, விளையாட்டுப் பிரிவினருக்கான இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கான சேர்க்கை, பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை என பல்வேறு பிரிவுகளாக பொறியியல் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இதில், முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி ஆகிய மூன்று கல்லூரிகளில் உள்ள 2,500-க்கும் அதிமான இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கை இடங்கள் தொழில்நிறுவன கூட்டமைப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும். இந்த 3 கல்லூரிகளிலும் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், இதற்கான இடங்கள் விற்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வந்தது.
நடப்பு (2019-20)  கல்வியாண்டில் பி.இ. கலந்தாய்வை  நடத்தும் பொறுப்பு தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்திடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, பி.இ. சேர்க்கைக்கான ஆன்-லைன் விண்ணப்பங்களை மாணவர்களிடமிருந்து பெற்று வருகிறது. ஒட்டுமொத்த கலந்தாய்வையும் தொழில்நுட்ப கல்வி இயக்ககமே நடத்தும் என எதிர்பார்த்த நிலையில், வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பி.இ. இடங்கள், தொழில்நிறுவன கூட்டமைப்புத் திட்ட ஒதுக்கீடு  பி.இ. இடங்களை மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட பி.இ. இடங்களுக்கு மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்துவதும், மீதமுள்ள இடங்களை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துவதும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, அண்ணா பல்கலைக்கழகம் இதுவரை நடத்தி வந்ததைப்போல, ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வையும் புதிதாக பொறுப்பை ஏற்றுள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகமே நடத்த வேண்டும் என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன் கூறுகையில், தொழில்நிறுவன கூட்டமைப்புத் திட்ட பி.இ. ஒதுக்கீடு என்பது, பல்கலைக்கழகத்துக்கும் தொழில்நிறுவனங்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இருந்தபோதும், இதுகுறித்து தமிழக அரசுடன் ஆலோசித்த பின்னர் அந்தச் சேர்க்கையையும் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகமே நடத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com