சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

வேட்டவலம் ஜமீன் கோயிலில் திருடப்பட்ட மரகதலிங்கம் குப்பைத் தொட்டியில் மீட்பு

DIN | Published: 16th May 2019 02:34 AM


திருவண்ணாமலை மாவட்டம்,  வேட்டவலம் ஜமீன் கோயிலில் திருடப்பட்ட மரகதலிங்கம், குப்பைத் தொட்டியில் மீட்கப்பட்டது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டவலத்தில் ஜமீனுக்குச் சொந்தமான மனோன்மணீயம் அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்த ரூ. 8  கோடி மதிப்பிலான சுமார் 500 ஆண்டுகள் பழமையான அரை அடி உயர மரகதலிங்கமும், அதனுடன் இருந்த தங்க நகைகளும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி திருடப்பட்டன. 
இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கடந்த 2018-இல் மாற்றப்பட்டது. இதுதொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வேட்டவலத்தில் முகாமிட்டு  விசாரித்து வந்தனர்.
குப்பைத் தொட்டியில் சிலை:  மரகதலிங்கம் திருடப்பட்டது தொடர்பாக, வேட்டவலத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் உள்பட பலரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில்,  ஜமீன் பங்களாவில் உள்ள  குப்பைத் தொட்டியில் திருடப்பட்ட மரகதலிங்கம் கிடப்பதாக, ஜமீன் பணியாளர் பச்சையப்பன் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தார்.
 தகவலறிந்த வேட்டவலம் போலீஸாரும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று மரகதலிங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன்மாணிக்கவேலும் வேட்டவலத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
வழக்கின் குற்றவாளியை போலீஸார் நெருங்கி வந்த நிலையில், மரகதலிங்கம்  குப்பைத் தொட்டியில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலைத் திருட்டில் ஈடுபட்ட நபரே போலீஸாருக்கு பயந்து, அதைக் குப்பைத் தொட்டியில் வீசியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக ஜமீன் ஊழியர்கள், நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட மரகதலிங்கம், ஏற்கெனவே கடந்த 1987-இல் திருடப்பட்டு, மீண்டும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு செப்.25 வரை விண்ணப்பிக்கலாம்
பயணியிடம் அவதூறாக பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
ஹவுரா ரயிலில் 36 கிலோ கஞ்சா கடத்தல்: 3 போ் கைது
கோம்பை திருமலைராயப்பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வாரத்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்
'தமிழே உலகின் மூத்த மொழி' - வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?