திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

மாணவர் சேர்க்கையில் வித்தியாசம் காட்டும் சென்னை மாநிலக் கல்லூரி

By எம். மார்க் நெல்சன்| DIN | Published: 14th May 2019 02:50 AM
சென்னை மாநிலக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கிய நிலையில், படிப்புகளில் உள்ள காலி இடங்களை காட்ட கலந்தாய்வு அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் எல்.சி.டி திரை.

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர், கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.
ஒருங்கிணைந்த கலந்தாய்வை அரசு அறிமுகப்படுத்தும் வரை, சென்னை மாநிலக் கல்லூரி தனக்கென்று ஒரு நடைமுறையைப் பின்பற்றுகிறது. இந்த நடைமுறையைப் பிற அரசுக் கல்லூரிகளிலும் ஏன் நடைமுறைப்படுத்தப்படக் கூடாது என்று கல்வியாளர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
கலை-அறிவியல் கல்லூரிகளில் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை என்பது பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு உள்ளதுபோல ஒருங்கிணைந்த கலந்தாய்வு மூலம் நடத்தப்படுவது இல்லை. அந்தந்த கல்லூரிகள் தனித் தனியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையைச் செய்து வருகின்றன. தனியார் சுயநிதி கலை-அறிவியல் கல்லூரிகளில் மட்டுமின்றி, அரசு கல்லூரிகளிலும் இதே நிலைதான்.
இதனால், விண்ணப்பக் கட்டணம் ஒவ்வொரு கல்லூரிக்கும் வெவ்வேறாக இருப்பதும், அதிக வரவேற்பு உள்ள பி.காம். போன்ற படிப்புகளுக்கு கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
அதுபோல, அரசுக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெறுவதாகவும் புகார் கூறப்படுகிறது. 
வித்தியாசம் காட்டும் மாநிலக் கல்லூரி: பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை இல்லாத நிலையில், சென்னை மாநிலக் கல்லூரி மட்டும் வித்தியாசமான நடைமுறையைப் பின்பற்றி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து வருகிறது. இதற்கு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, பொறியியல், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் பின்பற்றப்படுவது போல, கல்லூரியில் கலந்தாய்வு நடைபெறும் அறையின் உள்ளேயும், வெளியேயும் எல்.சி.டி. திரை வைக்கப்பட்டு ஒவ்வொரு நாள் கலந்தாய்வின்போதும் படிப்புகளில் உள்ள காலி இடங்கள் குறித்த விவரங்களை அதில் வெளியிட்டு வருகிறது. மேலும், இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தப்படுகிறது. அதையும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்துகிறோம் என்கிறார் மாநிலக் கல்லூரி முதல்வர் ராவணன்.
இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளரும், கல்வியாளருமான பி.சிவராமன் கூறியது: 
கலை-அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கையிலும், பொறியியல்-மருத்துவப் படிப்புகளுக்கு உள்ளது போல ஒருங்கிணைந்த கலந்தாய்வு முறை கொண்டு வரப்படும் என கடந்த ஆண்டே உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியிருந்தார். ஆனால், இதுவரை கொண்டுவரப்படவில்லை. அவ்வாறு புதிய நடைமுறை கொண்டுவரும் வரை, சென்னை மாநிலக் கல்லூரியில் பின்பற்றப்படும் நடைமுறையை பிற அரசுக் கல்லூரிகளும் பின்பற்ற அரசு அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு நாள் கலந்தாய்வின்போதும், படிப்புகளில் உள்ள காலியிடங்களை வெளியிட்டால்தான், சேர்க்கையில் முறைகேட்டைத் தடுக்க முடியும் என்றார் அவர்.

சில கல்லூரிகளில் முறைகேடு?
சில அரசு கல்லூரிகளில் அதிக வரவேற்புள்ள பாடப் பிரிவுகளுக்குப் பணம் பெற்றுக் கொண்டு  மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகப்  புகார் எழுந்துள்ளது.
குறிப்பிட்ட  எண்ணிக்கையிலான இடங்களுக்கு, வேறு மாணவர்களைக் கொண்டு முதலில் சேர்க்கை நடத்துகின்றனர். பின்னர், மாணவர் சேர்க்கை முடியும் தருவாயில், அந்தப் பாடப் பிரிவில் அதிக விருப்பம் உள்ள மாணவர்களிடம்  பணம் பெற்றுக்கொண்டு, ஏற்கெனவே சேர்ந்த மாணவர்களை நீக்கிவிட்டு, பணம் கொடுத்த மாணவர்களைச் சேர்க்கின்றனர். 
இந்த முறைகேட்டில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுடன் கல்லூரி நிர்வாகமும் கைகோர்த்து செயல்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால்தான்  பெரும்பாலான  அரசுக் கல்லூரிகள்,  மாணவர்  சேர்க்கை கலந்தாய்வின்போது  அனைத்துப்  படிப்புகளிலும்  உள்ள  காலி  இடங்களை வெளிப்படையாக தெரிவிப்பது இல்லை. ஒட்டு மொத்த கலந்தாய்வும் முடிந்த பிறகே, காலி இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படுகின்றன என்று புகார் தெரிவிக்கின்றனர்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை:  தமிழக முதல்வர் கே. பழனிசாமி உறுதி
சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ரூ.6 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்
திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழகம்:  மு.க.ஸ்டாலின்
ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து ரூ. 86 லட்சம் மோசடி: துப்புரவு ஊழியர் பணியிடை நீக்கம்
பூரண மதுவிலக்கு கோரி குமரி அனந்தன் உண்ணாவிரதம்