4,200 ரகங்களில் 40 ஆயிரம் ரோஜா செடிகள்!: பூத்துக் குலுங்கும் உதகை  ரோஜா பூங்கா

நீலகிரி மாவட்டம் அமைக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆவதையொட்டி, அதனை சிறப்பிக்கும் வகையில் உதகையில் உள்ள அரசினர் ரோஜா பூங்காவில் மேலும் 200 ரகங்களில் ரோஜா செடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள்.
தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள்.


நீலகிரி மாவட்டம் அமைக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆவதையொட்டி, அதனை சிறப்பிக்கும் வகையில் உதகையில் உள்ள அரசினர் ரோஜா பூங்காவில் மேலும் 200 ரகங்களில் ரோஜா செடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகத் திகழ்வது உதகை அரசினர் தாவரவியல் பூங்கா. இந்தப் பூங்காவின் 100-ஆவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் கடந்த 1995 -ஆம் ஆண்டில் உதகை அரசினர்  ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது.
சுமார் 20 ஏக்கர் பரப்பளவிலான இப்பூங்காவில் தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா மலர் செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
கடந்த 2006-ஆம் ஆண்டில் சர்வதேச ரோஜா சம்மேளனத்தின் கார்டன் ஆஃப் எக்ஸலென்ஸ் விருதைப் பெற்று, இந்தியாவிலேயே அதிக அளவில் ரோஜா மலர் ரகங்களைக் கொண்ட   சிறந்த ரோஜா பூங்காவாகத் திகழ்கிறது. இந்நிலையில், அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் ஜான் சலீவனால் நவீன நீலகிரி உருவாக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 200   ஆண்டுகள் ஆகின்றன.
இதனைச் சிறப்பிக்கும் வகையில் தோட்டக் கலைத் துறை சார்பில் நவீன நீலகிரி- 200 என்ற பெயரில் புதிதாக 200 ரோஜா ரகங்களை நட்டுள்ளனர். அவற்றில் பிரதானமானது ரோஸ் சலீவன் ஆகும். 
இது கொடைக்கானலை சேர்ந்த ரோஜா வல்லுநர் விஜயராகவனால் புதிதாக உருவாக்கப்பட்ட ரகம் ஆகும். தற்போதைய கோடை சீசனில் இந்த ரோஸ் சலீவன் பூத்துள்ளது. இதனைக் காணும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழிலை மட்டுமின்றி, வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும். 
ஏற்கெனவே, உதகை ரோஜா பூங்காவை உருவாக்கிய ஜெயலலிதாவின் பெயரில் ஒரு புதிய ரோஜா ரகமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் காரணமாக நடப்பாண்டில் உதகை அரசினர் ரோஜா பூங்காவில் அதிகாரப்பூர்வமாக ரோஜா கண்காட்சி நடைபெறாவிட்டாலும், சுற்றுலாப் பயணிகளின் மனதில் எப்போதும் நினைவில் இருக்கும் ரோஜா பூங்காவை காணவும், இப்பூங்காவில் பூத்துள்ள ரோஜா மலர்களின் அழகை ரசிக்கவும் எவரும் தவறுவதில்லை. தற்போது, ரோஜா பூங்காவில் சுமார் 4,200 ரோஜா ரகங்களுடன் 40 ஆயிரம் ரோஜா செடிகளில் பல வண்ண ரோஜா  மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com