திங்கள்கிழமை 20 மே 2019

6 ரயில்களில் நகைப் பறிப்பு சம்பவம்: கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

DIN | Published: 06th May 2019 12:56 AM

சங்ககிரி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 6 ரயில்களில் ஏறி பயணிகளிடம் 24 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பெரியய்யா ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
 சங்ககிரியை அடுத்த வைகுந்தம், மேட்டுக்காடு ஆகிய பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் தரைவழிப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
 இதன் காரணமாக இந்த வழியாகச் செல்லும் ரயில்கள் அனைத்தும் 20 கிலோ மீட்டர் வேகத்திலேயே கடந்து செல்கின்றன.
 இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி சனிக்கிழமை அதிகாலையில் சங்ககிரி வழியாகச் சென்ற 6 ரயில்களில் மர்ம கும்பல் ஏறி, பெண் பயணிகளிடமிருந்து சுமார் 24 பவுன் நகைகளைக் கத்திமுனையில் பறித்துச் சென்றது. இச் சம்பவம் குறித்து, ஈரோடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 இந்த நிலையில், தொடர்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோவையிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் சேரன் விரைவு ரயிலிலும் மர்ம நபர்கள் இருவர் ஏறி, பயணிகளிடம் நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றனராம்.
 அவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் தப்பிச் சென்றனர். இருப்பினும், இதுகுறித்து யாரும் புகார் அளிக்கவில்லை எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
 இச் சம்பவங்களைத் தொடர்ந்து கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பெரியய்யா ஞாயிற்றுக்கிழமை சங்ககிரி சென்று தரைவழிப் பாலக் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தையும், ரயில்வே கேட், ரயிலிலிருந்து குதித்துச் செல்ல வாய்ப்புள்ள இடங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின்னர், ரயில்வே கேட் கீப்பர்கள், தரைவழிப் பாலப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார்.
 தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர், சங்ககிரி ரயில் நிலையம் முதல் மகுடஞ்சாவடி ரயில் நிலையம் வரை ரயில்வே போலீஸாருடன், சங்ககிரி சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார்.
 ஆய்வின்போது, ரயில்வே சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் செந்தில்குமார் , சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர், சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்: முதல்வர் 
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு
ஆட்சியை பிடிக்கப் போவது யார்? தினமணி வாசகர்களே உங்கள் கணிப்பு என்ன?
தேஜ கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் நாளை; துணை முதல்வர் இன்று தில்லி பயணம்
இடைத்தேர்தலால் குடிகாரர்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் கொஞ்சமா? நஞ்சமா?