3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஜனநாயக விரோதம்: கே.எஸ்.அழகிரி

மூன்று சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஜனநாயக விரோதம்: கே.எஸ்.அழகிரி

மூன்று சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
 கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
 பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் களத்திலேயே தோல்வியைக் கண்டுவிட்டார். தனது சாதனைகள், கொள்கைகளைக் கூறி வாக்கு சேகரிப்பதற்கு மாறாக பொய்களையும், தனி நபர்களைத் தாக்கியும் பேசி வருகிறார். மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் மோடி. புல்வாமா, பதான்கோட் தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார். ராணுவத்தின் பின்னால் நின்று கொண்டு தேர்தலை சந்திக்க நினைக்கிறார் மோடி. "தானே' புயலின்போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வந்தாரா என்று தமிழிசை கேட்கிறார். ஆனால், அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தியதை மறந்துவிட்டு அவர் இவ்வாறு பேசுகிறார். ஆனால், "கஜா' புயலின்போது மோடியோ அல்லது அமைச்சர்களோ தமிழகம் வரவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விருப்பம் உள்ள மாநிலங்கள் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம், விருப்பம் இல்லாத மாநிலங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால், நீட் தேர்வு வேண்டாம் என்று கூறிய அதிமுகவும், பாமகவும் இன்று பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளனர். தகுதி நீக்கும் நடவடிக்கையாக மூன்று சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதற்கு சட்டப் பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. அப்படி அவர்களைத் தகுதி நீக்கம் செய்தால் மீண்டும் 3 இடைத் தேர்தலை சந்திக்க நேரிடும். காலம் முழுக்க தமிழகம் தேர்தலை சந்தித்துக்கொண்டேதான் இருக்க வேண்டும். ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே மத்திய அரசு மீது குறை கூறியுள்ளது. மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறியதோடு அனைத்து மறு சீராய்வு மனுக்களையும் ஏற்க உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்றார்.
 முன்னதாக, விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரியை மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் ஆகியோர் வரவேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com