திங்கள்கிழமை 20 மே 2019

நீட் தேர்வு: தமிழகத்தில் 1.3 லட்சம் பேர் எழுதினர்

DIN | Published: 06th May 2019 03:18 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை, தமிழகத்தில் 1.34 லட்சம் பேர் எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வந்தநிலையில், இந்த ஆண்டு தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்தியது.
 இந்த நிலையில், நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்பட 14 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
 சென்னையைப் பொருத்தவரை மயிலாப்பூர், கே.கே.நகர், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் 31 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
 பிற்பகல் 2 மணிக்குத் தேர்வு தொடங்கியது. வழக்கம்போலவே இந்த ஆண்டும் கடுமையான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருந்தன.
 தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படும் முன்னர் தீவிர சோதனைக்கு மாணவர்கள் உள்படுத்தப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலமாகவும் சில இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் அணிந்து வந்த மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. அவற்றை கழற்றிய பிறகே தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டது.
 பாஸ்போர்ட், ஆதார், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஓர் அசல் ஆவணத்தைக் காண்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
 அதன் பின்னர், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுகள் சரிபார்க்கப்பட்டன. தேர்வுக் கூடத்தில் உதவியாளர்களை அழைத்து வரத் தகுதியுள்ள சலுகை பெறும் மாற்றுத்திறனாளிகள், அதற்குரிய அனுமதி சான்றுகளை காண்பித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
 முன்னதாக, முழுக்கைச் சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டையின் முழங்கைப் பகுதி கத்தரிக்கப்பட்டது. அதேபோன்று, ஷூ அணிந்து வந்தவர்களுக்கு தேர்வுக் கூடத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேர்வுக் கூடத்திலேயே பேனா வழங்கப்பட்டதால் சொந்தமாக பேனாக்களைக்கூட எடுத்துச் செல்ல முடியவில்லை. பர்ஸ், பெல்ட், தொப்பி, கைக் கடிகாரம், செல்லிடப்பேசிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
 தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வை எழுதினர். கடந்த இரு ஆண்டுகளைப் போல இம்முறை பெரிய அளவிலான சர்ச்சைகளோ அல்லது சச்சரவுகளோ இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது.
 எளிமையான வினாக்கள்
 நீட் தேர்வு இம்முறை எளிமையாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வினாக்கள் சற்று எளிமையாக இருந்ததாக அவர்கள் கூறினர்.
 தேர்வெழுதிய மாணவர்கள் மேலும் கூறியதாவது: நாங்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீட் தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தோம். அதன் பயனாக இந்த முறை வினாக்கள் அனைத்துக்கும் எங்களால் பதிலளிக்க முடிந்தது என்றனர்.
 முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?
 நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தற்போது ஒடிஸாவை தவிர பிற மாநிலங்களில் நீட் தேர்வு முடிந்தது. ஒடிஸாவில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகே அங்கு தேர்வை நடத்தக் கூடிய நிலை உள்ளது. அதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகலாம். எனவே, திட்டமிட்டபடி முடிவுகளை வெளியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
 
 
 
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்: முதல்வர் 
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு
ஆட்சியை பிடிக்கப் போவது யார்? தினமணி வாசகர்களே உங்கள் கணிப்பு என்ன?
தேஜ கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் நாளை; துணை முதல்வர் இன்று தில்லி பயணம்
இடைத்தேர்தலால் குடிகாரர்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் கொஞ்சமா? நஞ்சமா?