திங்கள்கிழமை 20 மே 2019

திமுக ஆட்சி அமைத்துவிடும் என்ற பயத்தில் 3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

DIN | Published: 06th May 2019 01:24 AM

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துவிடும் என்ற பயத்தில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 3 பேரைத் தகுதி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
 சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பொங்கலூர் நா.பழனிசாமியை ஆதரித்து வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், இருகூர், சூலூர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
 பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது: அதிமுக மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அதற்கு முதல் காரணம் கடைசிவரை மர்மமாகவே உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்தான். எனவே, திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து உண்மை வெளிக்கொண்டு வரப்படும். அதேபோல், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து உண்மை வெளிக்கொண்டு வரப்படும்.
 அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதற்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவமே சாட்சி. அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தொடர் மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வருகின்றனர். மோடிக்கு துதிபாடும் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் தங்கள் சுயலாபத்துக்காக எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். இத்தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சிக்கு நிரந்தர முடிவு கட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். திமுக ஆட்சி அமைத்தவுடன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். சூலூரில் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த விசைத்தறிக் குழு அமைத்து அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துவிடும் என்ற பயத்தில் 3 சட்டப் பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதை எதிர்த்து பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளோம் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்: முதல்வர் 
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு
ஆட்சியை பிடிக்கப் போவது யார்? தினமணி வாசகர்களே உங்கள் கணிப்பு என்ன?
தேஜ கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் நாளை; துணை முதல்வர் இன்று தில்லி பயணம்
இடைத்தேர்தலால் குடிகாரர்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் கொஞ்சமா? நஞ்சமா?