செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

ஆளுநர் கிரண் பேடி ராஜிநாமா செய்ய வேண்டும்: புதுவை முதல்வர் மீண்டும் வலியுறுத்தல்

DIN | Published: 06th May 2019 01:01 AM

புதுவை துணை நிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஆளுநர் கிரண் பேடி உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் வே.நாராயணசாமி மீண்டும் வலியுறுத்தினார்.
 புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
 புதுவை துணை நிலை ஆளுநருக்கென தனிப்பட்ட சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்றும், முதல்வர், அமைச்சர்கள் எடுக்கும் முடிவின்படிதான் அவர் செயல்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
 இந்தத் தீர்ப்பை எதிர்த்து துணை நிலை ஆளுநர் மேல்முறையீடு செய்வதற்கு, புதுவை அமைச்சரவை அனுமதிக்காது. தனிப்பட்ட முறையில் அவர் மேல்முறையீடு செய்யலாம்.
 அதற்கான செலவை அவரேதான் ஏற்க வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முதல்வர், அமைச்சர்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று புதுவை தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் கிரண் பேடி, புதுவை மாநில வளர்ச்சிக்கு இடையூறு செய்து பெரும் தடையாக இருந்தார். எனவே, இவற்றுக்குப் பொறுப்பேற்று அவர் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.
 இல்லையென்றால், மக்களே அவரை வீட்டுக்கு அனுப்புவர். உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி யார் செயல்பட்டாலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும். நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு நிலுவை ஊதியத்தில் 2 மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இலவச அரிசி வழங்கப்படும். பானி புயல் ஒடிஸாவை கடுமையாகத் தாக்கியுள்ளது. புதுவையில் ஒடிஸாவைச் சேர்ந்தவர்கள் 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில் புதுவை அரசு பங்கு கொள்கிறது. அவர்களுக்கு நிவாரணம் வழங்க தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் தாமாக முன்வந்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். இதில், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அத்திவரதரை தரிசித்தார் ராஜாத்தி அம்மாள்
தமிழகத்தில் எப்போதும் ‘மம்மி’ ஆட்சிதான்! அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்
மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம்:  கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது-  அமைச்சர் சி.வி. சண்முகம்