சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 108 பேரை 6 மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க அனுமதி

DIN | Published: 04th May 2019 01:27 AM


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 108 பேரை 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க  இந்திய மருத்துவ கவுன்சில்  அனுமதி அளித்துள்ளது.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இந்தக் கல்லூரியில் கடந்த 2016-2017ஆம் ஆண்டில் சேர்ந்த 108 மாணவர்கள், தங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த 108 மாணவர்களைச் சேர்க்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. 
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த 108 மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது தொடர்பாக தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கருத்துருவை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த 108 மாணவர்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க இயலாது. எனவே, இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி புதிய மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. அரசுத் தரப்பில் தாக்கல் செய்த அந்த மனுவில், 108 மாணவர்களையும் தமிழகத்தில் உள்ள 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. 
அந்த அனுமதியின்படி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களையும், காஞ்சிபுரம் கற்பகவிநாயகா, கோவை கற்பகம், சென்னை தாகூர், மதுரை வேலம்மாள் ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளில் தலா 12 மாணவர்களையும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் 10 மாணவர்களையும் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மறு ஆய்வு மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

விவசாயத்துக்கு கடல் நீரைப் பயன்படுத்த தொழில்நுட்ப ஆராய்ச்சி: எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தல்
அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
தேசியத் திறனாய்வுத் தேர்வு: செப். 7 வரை விண்ணப்பிக்கலாம்
ஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்
ரத்த அழுத்தம்: 46 சதவீதத்தினருக்கு விழிப்புணர்வு இல்லை