டான்செட் மட்டுமே நடத்தப்படும்: தனி நுழைவுத் தேர்வு கிடையாது

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு வழக்கம்போல டான்செட் (தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு) மட்டுமே நடத்தப்படும் எனவும்
டான்செட் மட்டுமே நடத்தப்படும்: தனி நுழைவுத் தேர்வு கிடையாது


எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு வழக்கம்போல டான்செட் (தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு) மட்டுமே நடத்தப்படும் எனவும், முன்னர் அறிவித்தது போல ஏயுசெட் (அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு) நடத்தப்படமாட்டாது எனவும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்காக துணைவேந்தர் சூரப்பா எடுத்த சில அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, அவருக்கும் தமிழக உயர்கல்வித் துறைக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் குழுவின் இணைத் தலைவராக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரை தமிழக அரசு நியமித்தது. 
இதனால் அந்தக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகினார். இதன் காரணமாக, 2019-20-ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகமே நடத்துகிறது.
மேலும், பல்கலைக்கழகத்தின் நிதிநிலையை உயர்த்துவதற்காக, ஒருசில கட்டணங்களை உயர்த்த பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு அனுமதி மறுத்து, தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டது.
இந்த மோதல் போக்கு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என 9 கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு தனியாக பொது நுழைவுத் தேர்வை (ஏயுசெட்) அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இதற்கு மே 6 முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு டான்செட் என்ற ஒரே நுழைவுத் தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்தது. 
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏயுசெட் அறிவிப்பால், இந்தப் படிப்புகளுக்கு இரண்டு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் நிலை உருவானது.
இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதனை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் உயர்கல்வித் துறை  அறிவித்தது. மேலும் இந்தத் தேர்வை நடத்தும் குழுவில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி கல்வி இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றிருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து, முதுநிலை படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் சூரப்பா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் துணைவேந்தர் அளித்த பேட்டி:
அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் துறைகளில் வழங்கப்படும் முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ, எம்.சி.ஏ. படிப்புகளின் சேர்க்கைகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வாக டான்செட் தேர்வையே நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 
தமிழக அரசின் பரிந்துரையை அடுத்து, இந்தத் தேர்வு நடத்தும் பொறுப்பை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்கிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com