செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

பக்கவாதத்தால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

DIN | Published: 03rd May 2019 02:50 AM
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுடன் அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் துறை மருத்துவர் கார்த்திகேயன்.


தூக்கமின்மை, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இளைஞர்களுக்கு தற்போது அதிக அளவில் பக்கவாத பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் துறை மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:
உலக அளவில் பக்கவாதம் பரவலாகக் காணப்படும்  பிரச்னையாக இருக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது அக்குழாய்கள் சேதமடைந்தாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக ஏற்படும் பக்கவாதத்தை முழுமையாக குணப்படுத்த இயலும். ஆனால், உரிய நேரத்தில் அதற்கான சிகிச்சைகளையும், மருந்துகளையும் எடுத்துக் கொள்வது அவசியம். மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்கிறது. அதேவேளையில், திடீரென ஒரு கையோ அல்லது காலோ சரிவர செயல்படவில்லை என்றால், நாம் உடனே மருத்துவமனைக்குச் செல்வதில்லை. மாறாக, சிறிது நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றோ, அல்லது தைலம் தேய்த்தால் சரியாகிவிடும் என்றோதான் எண்ணுகிறோம். இதுமுற்றிலும் தவறு. பக்கவாதம் ஏற்பட்டு 4 மணி நேரத்துக்குள் சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருந்துகளின் மூலமாகவே அதைக் குணப்படுத்த முடியும். 8 மணி நேரத்துக்குள் மருத்துவமனையை 
அணுகினால் ஆஞ்ஜியோ பிளாஸ்ட் போன்ற சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். ஆனால், அந்த விழிப்புணர்வு பலருக்கும் இல்லை. இதனால், தற்போது உலக அளவில் 6 விநாடிக்கு ஒருவர் பக்கவாதத்தால் உயிரிழக்கிறார்கள். பல கோடி பேர் வாழ்நாள் முழுவதும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் இருக்கின்றனர். ஆண்டுதோறும் 1.7 கோடி பேர் பக்கவாத பாதிப்புக்கு உள்ளாவதாகவும், அதில் 60 லட்சம் பேர் முறையான  சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் பலியாவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.சென்னையில் 8 ஆயிரம் பேரும், தமிழ்நாடு அளவில் 1 லட்சம் பேரும் ஆண்டுதோறும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. குறிப்பாக, தகவல் - தொழில்நுட்பத் துறை சார்ந்த பணிகளில் உள்ள இளம் தலைமுறையினர் பலர்  இந்தப் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். 
அண்மைக் காலமாக இளைஞர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதற்கு புகை, மதுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவையே  முக்கியக் காரணம் என்றார் அவர்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கன்னியாகுமரியில் ரூ 16 கோடி மதிப்பீட்டில் தென்னை மதிப்புக்கூட்டு மையம் அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அத்திவரதரை தரிசித்தார் ராஜாத்தி அம்மாள்
தமிழகத்தில் எப்போதும் ‘மம்மி’ ஆட்சிதான்! அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்