கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையை அதிகரிக்க புதிய சாதனங்கள் கொள்முதல்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக கூடுதலாக 4 டயாலிசிஸ் சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையை அதிகரிக்க புதிய சாதனங்கள் கொள்முதல்


கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக கூடுதலாக 4 டயாலிசிஸ் சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாதந்தோறும் 300-இலிருந்து 350 டயாலிசிஸ் சிகிச்சைகள் கூடுதலாக மேற்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிறுநீரகப் பிரச்னைக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். அவர்களில் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அந்த வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. சிலருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. டயாலிசிஸ் பிரிவைப் பொருத்தவரை தற்போது மொத்தம் 7 சாதனங்கள் அங்கு உள்ளன. இதன் மூலம் மாதந்தோறும் 350  டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 
இந்த நிலையில், புதிதாக மேலும் 4 டயாலிசிஸ் சாதனங்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.24 லட்சம் செலவில் இச்சாதனங்கள்  வாங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய சாதனங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள சாதனங்கள் அனைத்தும், மற்றொரு புதிய இடத்துக்கு மாற்றப்பட்டு அடுத்த சில வாரங்களில் செயல்படத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் செலவில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி கூறியது: 
புதிய டயாலிஸ் சாதனங்கள் வாங்கப்பட்டிருப்பதன் மூலம் தற்போது அளிக்கப்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை எண்ணிக்கையை விட  இரு மடங்கு கூடுதலாக சிகிச்சை அளிக்க முடியும். கீழ்ப்பாக்கத்தைத் தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் 30 டயாலிசிஸ் சாதனங்கள் புதிதாக வாங்கப்பட உள்ளன. அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கொள்முதல் நடவடிக்கைகள் தொடங்கும் என்றார் அவர்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறை பேராசியர் பலராமன் கூறியது: சிறுநீரக சிகிச்சைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாகவே தற்போது புதிய சாதனங்கள் வாங்கப்படுகின்றன.பொதுவாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் நோயாளியின் ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை மட்டுமே தானமாகப் பெற்று பொருத்த முடியும். ஆனால்,  மற்ற எந்த அரசு மருத்துவமனைகளிலும் இல்லாத வகையில் மாற்று ரத்தப் பிரிவு சிறுநீரகங்களையும் பொருத்தும் சவாலான அறுவை சிகிச்சைகள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com