வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

DIN | Published: 01st May 2019 02:42 AM


தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விளக்கம்:  மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) வரையறுத்துள்ள வழிமுறைகளின் படி மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு என்சிடிஇ கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.  
இதன் தொடர்ச்சியாக அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குப் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஐந்தாண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.  ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அமலாக்க முகவராக (நோடல் ஏஜன்சி) நியமிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் 2012-ஆம் ஆண்டு ஜூலை 12, அதே ஆண்டு அக்டோபர் 14 மற்றும் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தமிழக அரசு மேல் முறையீடு:  இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களைக் கொண்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் நியமனங்களை ஏற்பளித்திட,  பல வழக்குகள் தொடரப்பட்டு தீர்ப்பாணைகள் வெளியிடப்பட்டன.  இதைத் தொடர்ந்து துறையின் சார்பில் மேல்முறையீட்டு வழக்குகளும் தொடரப்பட்டன. 
இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு தேர்ச்சி பெற வாய்ப்பளிக்க வேண்டும். அதுவரை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம்.  கொடுக்கப்பட்ட அவகாசத்தில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால் அவர்கள் ஆசிரியர்களாக தொடரலாம். மாறாக,  தேர்வில் தோல்வியடைந்தால் அந்த ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது,  அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது. மேலும் அந்த ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
இதையடுத்து நான்காவது முறையாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப். 29, 30 தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.  பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மானியம் பெற்று வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.  இதற்கிடையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-க்கு மத்திய அரசு திருத்தம் வழங்கி,  டெட் தேர்வில் தேர்ச்சி பெற மேலும் நான்கு ஆண்டு காலம் அவகாசம் அளித்து மார்ச் 2019 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசின் அரசிதழ் எண்.34 10.8.2017-இல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
அவகாசம் வழங்க மத்திய அரசு மறுப்பு:  இதையடுத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையிடம் கோரப்பட்டதில்,  இனி மேற்கொண்டு அவகாசம் வழங்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது.  அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள்ளும்,  நீதிமன்ற உத்தரவின்படியும் மொத்தம் நான்கு முறை தமிழக அரசால் டெட் தேர்வு நடத்தி வாய்ப்புகள் வழங்கப்பட்டும் 1,500 ஆசிரியர்கள் இதுவரை தேர்ச்சி பெறவில்லை.  இந்தநிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு மூலம் நிகழாண்டு ஆசிரியர் தேர்வு நடைபெற கடந்த பிப். 28-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

புதுச்சேரி ஆளுநரின் அதிகார வழக்கு: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு
ஆரோக்கியமாதா திருவிழா: வேளாங்கண்ணிக்கு 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்
திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை
நிலவில் சந்திரயான்-2 சுற்றுவட்டப் பாதையை குறைக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகச் சரிவு