அண்ணா பல்கலை. விடைத்தாள் முறைகேடு: 37 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம்

அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வு விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டதாக 37 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வு விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டதாக 37 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வுக் காலங்களில் அலுவலக உதவியாளர்களாக தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் துணையுடன் இந்த முறைகேடு நடந்துள்ளது. 
இதில் ஈடுபட்ட மாணவர்கள், 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில் ஓரிரு பக்கங்கள் மட்டும் எழுதி விட்டு, மற்ற பக்கங்களில் எதுவும் எழுதாமல் கொடுத்துள்ளனர்.
அந்த விடைத்தாளை, தேர்வு முடிந்து ஓரிரு நாள்களுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அலுவலக உதவியாளர்கள் கொடுத்துள்ளனர்.
எழுதப்படாமல் விட்ட பக்கங்களில் சரியான விடைகளை நிரப்பி, அந்த மாணவர்கள் அலுவலக உதவியாளரிடம் கொடுத்துள்ளனர். இதற்காக தேர்வு எழுதிய மாணவர்களிடம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக உதவியாளர்கள் பெற்றுள்ளனர்.
இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சேலம், மதுரை உள்பட 5 மண்டலங்களைச் சேர்ந்த 37 தற்காலிகப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். எனினும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com