தமிழ்நாடு

"பதிவு செய்யப்பட்ட குத்தகை விவசாயிகள்' பயன்பெற விதிமுறை தளர்த்தப்படுமா?

4th Mar 2019 03:39 AM | - ஆ.நங்கையார்மணி

ADVERTISEMENT


திண்டுக்கல்: "பதிவு செய்யப்பட்ட குத்தகை விவசாயிகள்' என்ற விதிமுறை காரணமாக பிரதம மந்திரியின் கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெற முடியாமல் தமிழகத்தில் சுமார் 25 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதித் திட்டத்தை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் (3 தவணைகளில்) உதவித்தொகை வழங்கும் இத்திட்டம் விவசாயிகள் தரப்பில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு பண்ணைக் குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் அனைவரது பெயர்களிலும் உள்ள சாகுபடி நிலம், 5 ஏக்கருக்கு மிகாமல் இருக்க வேண்டும். தரிசு நிலங்களுக்கும், மனைகளாக  வகைப்படுத்தப்பட்ட நிலங்களை உடையவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பெயரில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

நில உரிமைக்கான முக்கிய ஆவணங்களான பட்டா, சிட்டா, பத்திரப்பதிவு ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகை வழங்கப்படுவதால், குத்தகைக்கு சாகுபடி  செய்யும் விவசாயிகள் பயன்பெற முடியாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

மேலும், மத்திய - மாநில அரசு ஊழியர்கள் (தொகுதி 4 வகை அரசு ஊழியர்களை தவிர) மற்றும் மாதம் ரூ.10 ஆயிரத்துக்கு கூடுதலாக ஓய்வூதியம் பெறுவோர், பதிவுப்பெற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 2015-16 ஆம் ஆண்டு புள்ளியியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையிலேயே, சிறு - குறு விவசாயிகளுக்கான பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 71 லட்சம் சிறு - குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இதில், 30 சதவீத விவசாயிகள் குத்தகை நிலங்களில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். அதேபோல் எஞ்சியுள்ள 49 லட்சம் பேரில் 15 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டுப் பட்டாவில் சாகுபடி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்ட விதிமுறைகளின்படி, தமிழகத்தில் குத்தகை விவசாயிகள் சுமார் 22 லட்சம் பேரும், கோயில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் 3.50 லட்சம் பேரும் மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதி உதவியைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடுமையான விதிமுறைகளால் 71 லட்சம் சிறு - குறு விவசாயிகளில் 50 சதவீதம் பேர் கூட பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனிடையே, கூட்டுப்பட்டாவில் சாகுபடி செய்யும் விவசாயிகள், அந்தந்த கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையின் மூலம் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஒரு தரப்பு விவசாயிகளுக்கு  மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் குத்தகை விவசாயிகளை பொருத்தவரை, பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையால், 1 சதவீதம்பேர் கூட பயன்பெற முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.


இதுதொடர்பாக ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.பி.ராஜேந்திரன் கூறியது:

குத்தகை நிலங்களைப் பொருத்தவரை, பல இடங்களில் நம்பிக்கையின் அடிப்படையிலும், சிலர்  பத்திரங்கள் மூலம் எழுதிக் கொடுத்தும் விவசாயம் செய்து  வருகின்றனர். தமிழகம் முழுவதும் 99 சதவீதம் பேர், இதுபோன்ற நடைமுறைகளின் அடிப்படையிலேயே விவசாயம் செய்து வருகின்றனர்.

மத்திய அரசின் நிதி உதவி திட்டத்துக்கு "பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலங்கள்' என்ற விதிமுறையை நிர்ணயித்தால் எந்த விவசாயியும் பயன்பெற முடியாது. விவசாயத்தை பொருத்தவரை, அது சொந்த நிலமாக இருந்தாலும், குத்தகை நிலமாக இருந்தாலும் நிலத்தை தயார்படுத்துதல், விதைத்தல், களையெடுத்தல், இடுபொருள்கள் என அனைத்துப் பணிகளும் ஒரே மாதிரியாக செய்ய வேண்டும். குத்தகை விவசாயிகளும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அதனை கருத்தில்கொண்டு, கூட்டுப் பட்டாவில் தனித் தனியாக விவசாயம் செய்வோருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையின்படி நிதி உதவி வழங்கலாம் என்ற அறிவிப்பினை, குத்தகை விவசாயிகளுக்கும் பொருந்தும் வகையில் அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும். சிறு - குறு விவசாயிக்களுக்கான நிதி உதவி பெறுவதற்கு மட்டும் என்ற அடிப்படையிலாவது கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சான்றளிக்க வேண்டும் என்றார்.

கோயில் குத்தகை நிலங்களில் 3.50 லட்சம் விவசாயிகள்: 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள விளை நிலங்களில் சாகுபடி செய்துவரும் சிறு - குறு விவசாயிகளையும், பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36,685 கோயில்களுக்கு சொந்தமான 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் 1.37 லட்சம் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். 

அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 17 திருமடங்களுக்கு சொந்தமான விளை நிலங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். வறட்சி, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின்போது பயிர்கள் பாதிக்கப்பட்டாலும் கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில்லை. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள நிதி உதவித் திட்டத்திலும், இந்த விவசாயிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT