தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்

29th Jun 2019 01:48 AM

ADVERTISEMENT


கர்நாடக அரசு மேக்கேதாட்டு பகுதியில் அணைக் கட்டும் நடவடிக்கை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் பூஜ்ய நேரத்தில் அதிமுக உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணன் முன்வைத்த கோரிக்கை:
காவிரி விவகாரத்தில் நடுவர்மன்ற தீர்ப்பாயத்தின் உத்தரவில் உச்சநீதிமன்றம் மாற்றம் செய்து தமிழகத்திற்கான நீரை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக அரசு மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. கர்நடாக அரசு ஏற்கெனவே விரிவான திட்ட அறிக்கையையும் மேற்கொண்டுவிட்டனர். இதற்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்தது.
தற்போது இத்திட்டத்திற்காக கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளது. இந்த அனுமதியை சட்டவிரோதமாக வழங்க முடியாது. தமிழகத்தின் சம்மதம் இன்றி அணைகள் கட்டப்பட முடியாது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு தனது கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்து வருகிறது.
 ஆகவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கர்நாடக அரசுக்கு அனுமதி தராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் தண்ணீர்ப் பற்றாக்குறையால் இருப்பதால் பிரதமர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்றார்.
இக்கோரிக்கையை ஆதரிப்பதாக திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, திருச்சி சிவா, அதிமுக உறுப்பினர்கள் லட்சுமணன், கே.ஆர்.அர்ஜுனன், ஏ.கே. செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன் ஆகியோர் தெரிவித்தனர். 
ரூ.2 ஆயிரம் கோடி சிறப்பு நிதி: மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் வெள்ளிக்கிழமை பேசுகையில், 14-ஆவது நிதிஆணையத்தின் கீழ் தமிழக அரசு பெற்றுவந்த, குறைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வை ஈடு செய்யும் வகையில் தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்களுக்காக சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 
தொலைத்தொடர்பு மாவட்டம்: மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் வெள்ளிக்கிழமை முன்வைத்த கோரிக்கையில், சிறிய நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்டத்துடன் அதிக மக்கள் தொகைக் கொண்ட திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டத்தை இணைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்க வேண்டுமெனில் சிவகிரியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பணியாளர் எண்ணிக்கை, ஒருங்கிணைப்பு தளம், வாடிக்கையாளர் நலன் போன்றவை குறித்து பரிசீலிக்காமல் மிகச்சிறிய தொலைத்தொடர்பு மாவட்டமான நாகர்கோவிலுடன் பெரிய தொலைத்தொடர்பு மாவட்டமான திருநெல்வேலியை இணைக்கும் நடவடிக்கையை அரசு ஏன் எடுத்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT