சட்டவிரோத நிலத்தடி நீர்த்திருட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கெளரிவாக்கத்தைச் சேர்ந்த என்.நாகேஸ்வர ராவ் தாக்கல் செய்த மனுவில், சென்னை தாம்பரம் தாலுகா செம்பாக்கம் நகராட்சிக்கு உள்பட்ட கெளரிவாக்கம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரைத் திருடி லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத் தேவைகளுக்காக பெற்ற மின் இணைப்பை பயன்படுத்தி தண்ணீரை வணிக நோக்கில் விற்பனை செய்ய பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு நிலத்தடி நீரை விற்பனை செய்ய எந்த உரிமமும் பெறாமல் மின் வாரியத்தை ஏமாற்றி வருகின்றனர். இரவு பகலாக டேங்கர் லாரிகளில் தண்ணீர் திருடப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஆனால் அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிலத்தடி நீரைத் திருடுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 379- இன் கீழ் குற்றவியல் வழக்குத் தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே கெளரிவாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்ச தடை விதிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட இடங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறதா? தண்ணீரை உறிஞ்சி வணிக நோக்கில் விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ளனரா? என்பது குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தண்ணீர் கொண்டு செல்லும் வாகனங்கள், தண்ணீரை உறிஞ்சும் மோட்டார்களை பறிமுதல் செய்து நிலத்தடி நீரைத் திருடி வணிக நோக்கில் விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சேலையூர் காவல்நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.