நெற்களஞ்சியத்தை எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றும் மத்திய அரசு: ராமதாஸ் கடும் கண்டனம் 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த காவிரி பாசன மாவட்டங்களை இப்போது எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
நெற்களஞ்சியத்தை எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றும் மத்திய அரசு: ராமதாஸ் கடும் கண்டனம் 

சென்னை: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த காவிரி பாசன மாவட்டங்களை இப்போது எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இராமநாதபுரம் மாவட்டம் முதல் கடலூர் வரையிலான காவிரி பாசன மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 104 எண்ணெய்க் கிணறுகளை தோண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் இயற்கை வளங்களை சூறையாடும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் எண்ணெய்க் கிணறுகளை அமைக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த காவிரி பாசன மாவட்டங்களை இப்போது எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாகவே காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணிகளை  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

காவிரி பாசன மாவட்டங்கள் ஏற்கனவே வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வரும் நிலையில், இப்போது புதிதாக செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றிவிடும்.

காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை 200-க்கும் கூடுதலான கச்சா எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு போசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

உலகின் வறுமை மிகுந்த நாடுகளில் கூட மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் தான் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படாமல் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன.

காவிரி பாசன மாவட்டங்களில் எண்ணெய்க் கிணறுகள் என்ற எமன் அதிக அளவில் அமைக்கப்பட்டது கடந்த 30 ஆண்டுகளில் தான். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது திமுக தான். தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 28.08.1989 அன்று அனுமதி அளித்தது திமுக அரசு தான். அதன்பிறகு அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டதும் திமுக ஆட்சிக் காலங்களில் தான். அப்போது வளரத் தொடங்கிய ஹைட்ரோ கார்பன் பூதம் தான் இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிரட்டும் அளவுக்கு விசுவரூபம் எடுத்துள்ளது.

எனவே, இந்த எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு  சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது. இவ்விஷயத்தில் மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி இத்திட்டத்தை தடுக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com