போதையில் இருந்து புதிய பாதைக்கு...அரசு மருத்துவமனைகளில் 6 லட்சம் பேருக்கு மறுவாழ்வு சிகிச்சை!

தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு போதை மறுவாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
போதையில் இருந்து புதிய பாதைக்கு...அரசு மருத்துவமனைகளில் 6 லட்சம் பேருக்கு மறுவாழ்வு சிகிச்சை!

தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு போதை மறுவாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதன் பயனாக அவர்களில் பெரும்பாலானோர் அப்பழக்கத்தில் இருந்து விடுபட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேவேளையில், மற்றொரு பக்கம்,  மதுப் பழக்கத்துக்கு அடிமையாவோரின் விகிதம் ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசு உரிய தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்றும்,  மாவட்டந்தோறும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தற்போது நாட்டில் குஜராத், பிகார், மிúஸாரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் சட்டப்பூர்வமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஆய்வுத் தரவுகளின்படி இந்தியாவில் 14.6 சதவீதம் பேர் மதுப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். அதேபோன்று கஞ்சாவுக்கு 2.8 சதவீதம் பேரும், ஹெராயின், ஓபியம் உள்ளிட்ட போதை பொருள்களுக்கு 4.5 சதவீதம் பேரும் அடிமையாகியிருப்பதாகத் தெரிகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை 10-இல் 4 பேருக்கு மதுப் பழக்கம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த எண்ணிக்கை அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, சமூகத்தில் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு செயல் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது. மாநில அரசுடன் இணைந்து தேசிய சுகாதார இயக்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதைத் தவிர, கடலூர், காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய இடங்களில் போதை மறுவாழ்வுக்கென பிரத்யேக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்ட அந்த மையங்களில் தலா 30 படுக்கை வசதிகள் உள்ளன. மருத்துவ சிகிச்சை, உணவு, பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக மட்டும் ஆண்டுதோறும் ரூ.2 கோடிக்கும் மேல் அங்கு செலவிடப்படுகிறது. 
இந்த நிலையில், மாநிலம் முழுவதும்  கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நிகழாண்டு மே மாதம் வரை 6 லட்சத்து 19,148 பேருக்கு போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் காஞ்சிபுரம், கடலூர், திருப்பூரில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது ஒரு வகையில் வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், அனைத்து மாவட்டங்களிலும் போதை மறுவாழ்வுக்கென சிறப்பு மையங்களை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
அண்மைக் காலமாக இளைஞர்கள், பதின் பருவ சிறார்கள், பெண்களிடையே மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. இதுதொடர்பான விழிப்புணர்வு பெற்றோருக்கு இருத்தல் அவசியம்.
 பள்ளி பாடத்திட்டத்தில் மதுவின் தீமைகள் தொடர்பாக தனிப் பாடங்களை வகுக்க வேண்டும். சர்வதேச போதை மறுவாழ்வு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி இக்கோரிக்கைகளை அரசு ஏற்று அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 7 இடங்களில் போதை மறுவாழ்வு மையங்கள்
காஞ்சிபுரம், திருப்பூர், கடலூர் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து சேலம், கோவை, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதை மறுவாழ்வு சிறப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
டாஸ்மாக் நிதி: இதனிடையே, டாஸ்மாக் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியை பெற்று அடுத்த 5 ஆண்டுகளுக்கு போதை மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


நாடு முழுவதும் மதுவுக்கு பலியாவோர் 
நாளொன்றுக்கு    6,000
ஆண்டுக்கு    2.6 லட்சம்
சாலை விபத்துகளில் உயிரிழப்போர்    1 லட்சம்
கல்லீரல் பிரச்னையால் உயிரிழப்போர்    1.4 லட்சம்
புற்றுநோய் தாக்கி உயிரிழப்போர்    30 ஆயிரம்
மது நுகர்வு சதவீதம்
இந்தியா முழுவதும்    14.6 சதவீதம்
ஆண்கள்    78 சதவீதம்
பெண்கள்    22 சதவீதம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com