தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர்: ஆணையம் உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களுக்கான 40.24 டிஎம்சி நீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
தில்லியில் செவ்வாய்க்கிழமை  காவிரி  நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.மசூத் ஹுசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை  காவிரி  நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.மசூத் ஹுசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.


உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களுக்கான 40.24 டிஎம்சி நீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என மே 28-ஆம் தேதி ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், பிலிகுண்டுலு பகுதிக்கு ஜூன் 23 வரையிலான காலத்தில் 1.885 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது என்று ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு மொத்தம் 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு விடுவிக்க வேண்டும். மே 28-இல் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் போது, காவிரியில் ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி நீரைத் திறந்துவிட ஆணையம் உத்தரவிட்டது. அதன் பிறகு, ஜூன் 7, ஜூன் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் 9.19 டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என தமிழக தரப்பில் கோரப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பிறகு அதன் தலைவர் நவீன் குமார் கூறுகையில், நிகழ் நீர் ஆண்டில் (2019-20) ஜூன் 1 முதல் ஜூன் 19-ஆம் தேதி வரையிலான காலத்தில் பிலிகுண்டுலுவுக்கு 1.729 டிஎம்சி நீர் வந்துள்ளது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவரங்கள் அனைத்தும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்திருந்தார். 
இந்நிலையில், தில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் அதன் தலைவர் மசூத் ஹுசேன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக அரசின் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளரும் ஆணையத்தின் உறுப்பினருமான எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம், திருச்சி மண்டல பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், புதுச்சேரி பொதுப்பணித் துறை செயலர் ஏ.அன்பரசு மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
தமிழகத்தின் கோரிக்கை: காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கீட்டு நீர் விடுவிக்கப்படாததாலும், மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததாலும், காவிரி டெல்டா பாசனத்திற்காக வழக்கமான நாளான ஜூன் 12-ஆம் தேதி தமிழக அரசால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிட இயலாமல் போனது. விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை நீரை எதிர்பார்த்துள்ளனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட ஜூன் மாதத்துக்குரிய 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் விடுவிக்கவில்லை. எனவே, இந்த 9.19 டிஎம்சி நீரை இந்த மாத இறுதிக்குள் கர்நாடகம் விடுவிக்க ஆணையம் உத்தரவிட வேண்டும்.  மேலும், 2019-2020 பாசனப் பருவ ஆண்டுக்கு ஜூலை மாதத்திற்குரிய 31.24 டிஎம்சி நீரையும் மற்றும் தொடர்ந்து வரும் மாதங்களுக்கான நீரையும் விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழகத்தின் சார்பில் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 தமிழகத்துக்கு 1.885 டிஎம்சி நீர்: பின்னர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காவிரியில் நீர் திறந்து விடுவது தொடர்பாக காவிரிப் படுகைப் பகுதிகளில் உள்ள நீரியல் சூழல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, காவிரிப் படுகைப் பகுதிகளில் மழைப் பொழிவு பற்றாக்குறையாக இருப்பது குறித்தும், பருவமழை தாமதமாகிவிட்டது குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாதம்தோறும் பிலிகுண்டுலுவில் விடப்பட வேண்டிய ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரையும், ஜூலைக்கான 31.24 டிஎம்சி நீரையும் விடுவிப்பதை கர்நாடகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்திய வானியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஜூன் 1 முதல் ஜூன் 20-ம் தேதி வரையிலான காலத்தில் கிருஷ்ணராஜசாகர், கபினி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு பற்றாக்குறையாக இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 
கர்நாடகத்தில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களுக்கு ஜூன் 24 வரையிலான காலத்தில் ஒட்டுமொத்தமாக 1.77 டிஎம்சி தண்ணீர் உள்வரத்து இருந்ததும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பிலிகுண்டுலு பகுதிக்கு ஜூன் 23 வரையிலான காலத்தில் 1.885 டிஎம்சி நீர் வந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் ஜூன், ஜூலைக்குரிய மாதாந்திர நீரைத் திறந்துவிட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 
கர்நாடக மாநிலம், காவிரிப் படுகையில் உள்ள நீர்த் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு, நீரியல் சூழல் ஆகியவை குறித்து கர்நாடகத்தின் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல, புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி புதுச்சேரிக்கு நீர் திறந்து விடுவது தொடரும் என்றார் அவர். 
மேக்கேதாட்டு அணை: 4 மாநிலங்களுடன் பேசி முடிவு   
காவிரியில் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் குறித்து  ஆணையத்தின் கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநில உறுப்பினர்களுடன்  கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று காவிரி நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் தெரிவித்தார்.  
மே 28-இல் நடைபெற்ற கூட்டத்தின் நிகழ்ச்சி  நிரலில் மேக்கேதாட்டு அணைத் திட்ட விவகாரம் சேர்க்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டது. இதேபோல, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைத் திட்டம் குறித்து நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தது. இதற்கு தமிழக அரசின் தரப்பில் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் இன்றியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையிலும் காவிரிப் படுகையில் எந்த இடத்திலும் அணை, நீர்த்தேக்கம் மற்றும் நீரை திருப்புவதற்கான கட்டுமானங்களை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு ஆணையம் அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழகம் வலியுறுத்தியது. 
இதுதொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மசூத் ஹுசேனிடம் கேள்வி எழுப்பிய போது, மேக்கே தாட்டு அணை கட்டும் விவகாரம் இன்றைய கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக  காவிரி நீர் ஆணையக் கூட்டத்தில் உள்ள  அனைத்து மாநில உறுப்பினர்களுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com