நடிகர் சங்கத் தேர்தல்: வாக்களிக்காதோர் மீது நடவடிக்கை?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்காத நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. 
நடிகர் சங்கத் தேர்தல்: வாக்களிக்காதோர் மீது நடவடிக்கை?


தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்காத நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. 
 மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடந்தது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. 
தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள் என 69 பேர் தேர்தல் களத்தில் இருந்தனர். இந்தத் தேர்தலில் வாக்குரிமை பெற்ற 3,171 வாக்காளர்களில் 1,604 பேர் நேரில் வந்து வாக்களித்தனர். 
தபால் மூலமாக சுமார் 900 பேர் வரை வாக்களித்துள்ளதாகத் தெரிகிறது. வெளியூரில் இருக்கும் நாடக நடிகர்கள் தபால் மூலம் அளித்த வாக்குகள் தெரிய வரும்போதுதான் மொத்த வாக்கு எண்ணிக்கை தெரிய வரும். மொத்தமாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. 
சின்னத்திரை தொடர்பான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது. 
இந்த நிலையில், பல முக்கிய நடிகர்கள் வாக்களிக்க வராமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருக்கிறார். அவருக்கு தபால் வாக்குச்சீட்டு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார். 
அஜித், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ராதிகா, மீனா, ஜோதிகா, நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, சிம்ரன், ஓவியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் தங்களது வாக்குகளைச் செலுத்தவில்லை. இதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. இவர்களுக்கு ஒருவேளை தபால் ஓட்டுகள் அனுப்பப்பட்டு அதன் மூலம் வாக்களித்தார்களா என்பதும் இதுவரை தகவல் இல்லை. 
நடிக, நடிகைகளுக்கான தொழில் பாதுகாப்பு, சம்பள குளறுபடிகளில் உள்ள சிக்கல்கள், பஞ்சாயத்துகள் ஆகியவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்தும் வைக்கும் அமைப்பாக நடிகர் சங்கம் உள்ளது. ஆனால், அதற்கான தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை தேர்வு செய்யும் போது, தேர்தலை புறக்கணிப்பது என்ன விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் வாக்களிக்காத நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com