தமிழ்நாடு

தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

25th Jun 2019 05:36 PM

ADVERTISEMENT


சென்னை: தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், விவசாயத்தை விட்டுவிட்டு மீன்பிடிக்கச் சென்றுவிட்டார்கள்.

விவசாயி முனுசாமி தனது விளை நிலத்தில் விவசாயத்தைத் தொடர முடியாத நிலையில், கட்ரங்கால் ஏரியில் அதிகாலை 6 மணிக்கே சென்று மீன்பிடிக்கிறார். அவர் மட்டுமல்ல, அவருடன் ஏராளமான விவசாயிகளும் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக விவசாயிகள் எல்லாம் தற்காலிகமாக மீனவர்களாக மாறியுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் முற்றிலும் வறண்டு போகவிருக்கும் ஏரிகளில் இருக்கும் மீன்களை பிடிப்பதுதான் இவர்களது அன்றாடப் பணி.

ஏரி வறண்டு, மீன்கள் இறந்து விடுவதற்குள் எவ்வளவு மீன்களைப் பிடிக்க முடியுமோ அவ்வளவு மீன்களைப் பிடித்து விட வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.

ADVERTISEMENT

இதுதான் முதல் முறை இந்த ஏரி முற்றிலும் வறண்டு போகும் நிலையை அடைந்துள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்த். இந்த ஏரியில் இருக்கும் மீன்களைப் பிடிக்க ரூ.20000ம் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறார் இவர்.

கடைசியாக 30 அடி வரையிலாவது ஏரியில் தண்ணீர் இருக்கும். இந்த ஆண்டு வெறும் 2 அடி தண்ணீர்தான் இருக்கிறது. இதுவரை இந்த ஏரியில் இருக்கும் தண்ணீர் முழுக்க விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு, மீன்பிடி தொழில் மூலமாக ஏதோ ஒரு சிறு வருவாய் கிடைக்கிறது. ஏரியில் மீன்பிடிக்க இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.700ம் ஒரு கிலோ மீனும் ஊதியமாகக் கிடைக்கும் என்கிறார் ஆனந்த்.

இந்த ஏரியில் இருந்து விரால் மற்றும் குரவை மீன்கள் கிடைக்கின்றன. விரைவில் மழை பெய்யும், நாங்கள் மீண்டும் எங்கள் விவசாயப் பணிக்கே திரும்புவோம் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டே நெற்றியில் இருந்து வழிந்து நெஞ்சில் வந்து விழும் வியர்வையைத் துடைத்தபடி சொல்கிறார் விவசாயி முனுசாமி.

இங்கு பிடிக்கப்படும் மீன்கள் காசிமேடு, ராயபுரம், எண்ணூர் பகுதிகளில் விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. கிடைக்கும் லாபத்தில், விவசாயிகளுக்கு ஊதியம் போக மிச்சமிருக்கும் பணத்தை சமூக பணிக்காகவும் செலவிடுவதாக ஆனந்த் கூறுகிறார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT