தமிழ்நாடு

ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு: இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை  முன்ஜாமீன் 

25th Jun 2019 04:23 PM

ADVERTISEMENT

 

மதுரை: ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு  முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் உமர் பாரூக் நினைவுநாள் பொதுக்கூட்டம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைத் தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதையடுத்து இரஞ்சித்தின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் விதத்திலும், இளைஞர்கள் மனதில் தீய எண்ணத்தை விதைக்கும் வகையிலும் உள்ளது.  எனவே, இரஞ்சித்தைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் பாலா திங்கள்கிழமை புகார் அளித்தார். அதேபோல் திருப்பனந்தாள் உள்ளிட்ட சில இடங்களிலும் இரஞ்சித் மீது வழக்குகள் தொடரப்பட்டன

ADVERTISEMENT

இதையடுத்து இரஞ்சித் மீது  இந்திய தண்டனைச் சட்டம் 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பேசியது), 153(ஏ), (1) (எ) (பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக வரலாற்றுத் தகவல் அடிப்படையிலேயே அவ்வாறு பேசியதாக இயக்குநர் பா. இரஞ்சித், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் உள்நோக்கத்துடன் நான் கருத்து தெரிவிக்கவில்லை, பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் உள்ள குறிப்புகளையே நானும் பேசினேன். என்னுடைய பேச்சு சமூகவலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: இரஞ்சித் - ராஜராஜ சோழன் சர்ச்சை: அச்சமூட்டும் பாசிசமும்.. உறுத்தும் சில மவுனங்களும்

இந்நிலையில் இயக்குநர் ரஞ்சித்தின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் கூறியதாவது:

பேசுவதற்கு எத்தனையோ விஷயங்களிருக்க மக்கள் கொண்டாடும் ஒரு மன்னனைப் பற்றி பொதுவெளியில் இப்படிப் பேசலாமா? தேவதாசி முறை எப்போதோ ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது அதைப் பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியம் என்ன? இப்போது அரசு தனது தேவைக்காக, திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்துவது போலத்தான்,அப்போது அரசர்கள் நிலங்களை கையாண்டார்கள்.

இவ்வாறு நீதிபதி ராஜமாணிக்கம் கருத்து தெரிவித்த  சூழ்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு ஜாமீன் வழங்குவதற்கு தமிழக அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு  தெரிவித்தது.பின்னர் திருப்பனந்தாள் காவல் நிலயத்தில்பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கடந்த வாரம் புதன்கிழமை (19.06.19) வரை இரஞ்சித்தைக்  கைது செய்யய மாட்டோம் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது.  

அதன்படி இந்த வழக்கானது 19-ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (21.06.19) ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே வெள்ளிக்கிழமை வரை இரஞ்சித்தை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கானது வெள்ளியன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் ரஹீம் என்பவர் இவ்வழக்கில் தன்னையும் மனுதாரராக இணைத்துக்கு கொள்ள அனுமதி கோரி மனுதாக்கல் செய்தார். அத்துடன் அதுதொடர்பான சில ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் அனுமதி கோரினார். அதேபோல் இயக்குநர் இரஞ்சித் தரப்பிலும் கூடுதல் கால் அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து வழக்கினை திங்கள்கிழமைக்கு(24.06.19) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம் இயக்குநர் பா.இரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க வேண்டும் என்ற இரஞ்சித் தரப்பினரது கோரிக்கையை ஏற்க மதுரை உயர் நீதிமன்றக்  கிளை மறுத்து விட்டது.

இந்நிலையில் ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு  முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ரஞ்சித் தாக்கல் செய்த மற்றொரு வழக்கு திங்களன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததன் காரணமாக, முன்ஜாமீன் குறித்த வழக்கு விசாரிக்கபபடவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இரஞ்சித் பேசி ஒரு வாரம் கழித்தே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதேநேரம் எதிர்காலத்தில் இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT