தமிழ்நாடு

மழை பெய்யுமான்னு பாலச்சந்தரிடம் கேட்கிறோமே, அவர் ஒன்று சொல்கிறார் அதைக் கேட்போமா?

25th Jun 2019 02:26 PM

ADVERTISEMENT

 

ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க மக்கள் முன்வர வேண்டும் என்று மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தர் வலியுறுத்தினார்.

ஜோலார்பேட்டை அருகே வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

வடகிழக்குப் பருவமழைக் காலம் தமிழகத்திற்கு முக்கியமான காலமாகும். கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 55 சதவீதம் குறைவாக பெய்தது. வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தொடங்கும். இந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. அது படிப்படியாக நகர்ந்து வடக்கே செல்ல வேண்டும். ஆனால், அண்மையில் வாயு புயல் உருவாகி குஜராத்துக்கு கடந்து சென்றதால் தென்மேற்குப் பருவமழை வடக்கே செல்வதில் தடை ஏற்பட்டு விட்டது.

ADVERTISEMENT

பொதுவாக, ஜூன் மாதத்தில் 5 செ.மீ., ஜூலை மாதத்தில் 7 செ.மீ., ஆகஸ்டில் 9 செ.மீ., செப்டம்பரில் 11 செ.மீ. என மழை பெய்யும் மொத்தமாக பார்த்தால் 44 சதவீதம் மழை பெய்யும். தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் தமிழகத்தில் புயல் உருவாகாது. வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டுமே புயல் உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கும். ஆனால் அதை முன்கூட்டியே கணிப்பது கடினம். அந்தந்த பருவ கால மாற்றத்தைப் பொருத்தே கணித்துக் கூற முடியும். சென்னையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு தென் தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை. 

பொதுவாக மழையின் அளவு ஒவ்வொரு பகுதிக்கு பகுதி மாறுபடும். அதேபோல் மழையின் அளவு, மக்களின் தண்ணீர் பயன்பாடு காரணமாகவே அந்தப் பகுதியில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும். அதன் அடிப்படையில்தான் கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் 44 சதவீதம் வரை மழை குறைந்துள்ளது. 

அதே நேரத்தில் மக்களின் அதிக அளவு தண்ணீர் பயன்பாட்டால் சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் மழைநீரை சேமித்து வைக்க  வேண்டும். 

அதே போல் ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டியை அமைக்க மக்கள் முன்வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் மழைநீர் சேமிக்கும் எண்ணம் இருந்தால் நிலத்தடி நீர்மட்டம் தானாகவே உயரும். ஊர் கூடித் தேர் இழுப்பது போல் அனைவரும் மழை நீரை சேமித்தால் இனி வரும் காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இன்றி, நாமும் வளர்வோம்; நாடும் வளரும். சுற்றுச் சூழல் மாற்றங்கள் ஏற்படும்போது மழை பெய்வதிலும் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும் என்றார் அவர்.

என்ன பாலச்சந்திரன் சொல்வதைக் கேட்டுப் பார்க்கலாமா? கேட்டால் நிச்சயம் அடுத்த முறை ஜூன் மாதமே அவரிடம் சென்று மழை எப்போ சார் வரும்னு நாம் கேட்க வேண்டிய நிலை வராது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT