தமிழ்நாடு

நளினியை வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

25th Jun 2019 12:56 PM

ADVERTISEMENT

சிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ஆம் தேதி ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த மனுவில், எனது மகளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எனவே எனக்கு 6 மாத பரோல் வேண்டும் என சிறைத்துறைக்கு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோரிக்கை மனு கொடுத்தேன்.அந்த மனுவை பரிசீலிக்கவில்லை. மேலும் எனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 2000-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழக அரசு 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. 

ஆனால் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. ஆயுள்தண்டனை கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாத காலம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ளன. எனவே எனது மகளின் திருமணத்துக்காக 6 மாத காலம் பரோல் வழங்க வேண்டும். இந்த வழக்கில் நானே ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நளினியை ஆஜர்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த முறை வழக்கை விசாரித்த நீதிபதிகள், நளினி தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம், பரோல் கோரி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், நளினி விரும்பினால் காணொலிக் காட்சி மூலம் சிறையில் இருந்து ஆஜராகி வாதிடலாம், அவ்வாறு ஆஜராகி வாதிட விருப்பமா என நளினியிடம் கேட்டுக்கூற உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர். இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் உள்ள நளினியை ஜூலை 5ஆம் தேதி ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT