தமிழ்நாடு

அமமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்படுவார்: தினகரன்

25th Jun 2019 11:53 AM

ADVERTISEMENT


சென்னை: அமமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்படுவார் என்று கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மேலும், அமமுக கொள்கைப் பரப்புச் செயலராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார்; பெட்டிப்பாம்பாக அடங்குவார் என்றும் அவர் கூறினார்.

அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் கட்சிப் பொதுச் செயலர் டிடிவி தினகரன்.

அப்போது அவர் பேசுகையில், இன்று நடைபெற்றது திட்டமிட்ட ஆலோசனைக் கூட்டம்தான். அவசர ஆலோசனைக் கூட்டமல்ல.

ADVERTISEMENT

தங்க தமிழ்ச்செல்வன் கடந்த வாரம் பேசிய பேச்சுக்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் என்னிடம் புகார் அளித்தனர். இது குறித்து அவரை அழைத்து விளக்கம் கேட்டேன். அதற்கு அவர், செய்தியாளர்கள் கேள்வி கேட்டதால் அப்படி பதில் சொன்னேன் என்று பதிலளித்தார்.

இனி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினால் சரியாக பேசுங்கள் இல்லையென்றால், செயலாளர் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவிக்கு வேறு நபரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளேன் என்று தினகரன் தெரிவித்தார்.

முன்னதாக அதிமுக நிர்வாகியுடன் செல்போனில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், அமமுக நிர்வாகம் சரியில்லை, கட்சித் தலைமை எந்த முடிவு குறித்தும் கலந்தாலோசனை செய்வது இல்லை என்று கூறியிருந்தார். 

இது சர்ச்சையானதை அடுத்து, நான் பேசியதில் தவறு இருந்தால் என்னை அமமுகவில் இருந்து நீக்குங்கள்  என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தங்கதமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். இதனால் அமமுகவில் சலசலப்பு உருவானது.

தங்க தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எடுப்பார் என்று கூறப்படுகிறதே என செய்தியாளர் கேட்டதற்கு, அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார், பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார். அவரை யாரோ பின்னால் இருந்து கொண்டு இயக்குகிறார்கள்  என்று பதிலளித்தார் டிடிவி.

தொடர்ந்து அவர் பேசுகையில், தங்க தமிழ்ச்செல்வனிடம் இனி விளக்கம் கேட்பதற்கு எதுவும் இல்லை. விரைவில் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் அறிவிக்கப்படுவார் என்றும், அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்படுவார். அவரை நீக்குவதில் தயக்கமோ அச்சமோ எதுவும் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT