21 ஜூலை 2019

தகுந்த பாதுகாப்புடன் மயிலாப்பூர் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN | Published: 22nd June 2019 11:58 PM

மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பை மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் வாக்குப் பதிவுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அடையாறு பகுதியில் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்தார். இதனால், தேர்தலுக்காக வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.  இந்த வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாகக் கூறி, தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அறிவித்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். திட்டமிட்டப்படி நடிகர் சங்கத் தேர்தலை ஞாயிற்றுக்கிழமை நடத்தவும், தேர்தலில் பதிவான வாக்குகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எண்ணக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நிலுவையில் உள்ள வழக்கை விடுமுறை நாளான சனிக்கிழமை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தரப்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னைக்காக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதனால், இந்த போராட்டங்களை போலீஸார் சமாளிக்க வேண்டியுள்ளது. கடைசி நேரத்தில், மனுதாரர் பாதுகாப்பு கேட்பதாகக் கூறி வாதிட்டார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கிருஷ்ணா ரவீந்திரன்,  மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டும் என  வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நடிகர் சங்கத்தின்  தேர்தல் மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடத்த வேண்டும். இதற்கு தகுந்த பாதுகாப்பை மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் வழங்க வேண்டும். தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவேண்டும். இரவு 8 மணிக்கு மேல் பள்ளியை காலி செய்து விடவேண்டும். 

தேர்தலை நடத்தும் ஓய்வுப் பெற்ற நீதிபதி பத்மநாபனுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும். அவரது தேர்தல் பணியில் யாரும் தலையிடக்கூடாது. தேர்தலின்போது யாராவது தகராறில் ஈடுபட்டால், அவர்கள் மீது போலீஸார் உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். 

தேர்தல் நடைபெறும் பள்ளி வளாகத்துக்குள் மட்டுமே போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த போலீஸ் பாதுகாப்புக்கு ஆகும்  செலவு தொகை அனைத்தையும் நடிகர் சங்கம் ஏற்கவேண்டும். அந்த தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டும். 

மேலும், எப்பாஸ் பள்ளி இருக்கும் இடம் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, பள்ளிக்கு வெளியில், சாலையோரம் வாகனங்கள் எதுவும் நிறுத்தக்கூடாது. பள்ளி வளாகத்துக்குள் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். எந்த வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாதவர்களை தேர்தல் மையத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி வேதனையுடன், அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். நடிகர் சங்கத் தேர்தலை 2 வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐசரி கணேஷ் சார்பில் ஆனந்தராமன் என்பவர் என்னை அணுகினார். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனந்தராமன் எனக்கு தெரிந்தவராக இருந்தாலும், நீதிபரிபாலனத்தில் யாரும் தலையிடக்கூடாது. அவர்கள் இருவரும் செய்தது கடும் குற்றம். நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என நீதிபதி தெரிவித்தார்.

பின்னர், ஐசரி கணேஷ், ஆனந்தராமன் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி பதிவு செய்தார். இந்த அவமதிப்பு வழக்குக்கு 4 வார காலத்துக்குள் இருவரும் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து 
அத்திவரதர் வைபவத்தில் 5 ஆயிரம் போலீஸார்: டிஜிபி திரிபாதி
நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: ஈஆர்.ஈஸ்வரன்
சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்