தேர்வுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்துகிறது சென்னைப் பல்கலைக்கழகம்!

கடும்  நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தொலைநிலைக் கல்வி  நிறுவன படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 
தேர்வுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்துகிறது சென்னைப் பல்கலைக்கழகம்!


கடும்  நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தொலைநிலைக் கல்வி  நிறுவன படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 
இந்திய அளவில் பிரபலமான தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகமும், தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் தாய் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகமும் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இதனால் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், கல்வி என அனைத்து நிலைகளும் பாதிக்கத் தொடங்கியிருப்பதாக பேராசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிதி நெருக்கடி காரணமாக, இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையிலான ஊதிய உயர்வு, நிலுவைத் தொகைகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. அதோடு பேராசிரியர்  காலிப் பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை 200-க்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிதி பற்றாக்குறை காரணமாக, அனுமதி கிடைத்தும் இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாமல் பல்கலைக்கழகம் திண்டாடி வருகிறது. மேலும், 2018-இல் ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு இன்று வரை ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை. ரூ. 200 கோடி வரை பற்றாக்குறையில் பல்கலைக்கழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் பேராசிரியர்கள்.
இந்த நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இந்த இரு பல்கலைக்கழகங்களும் பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்த நடவடிக்கை எடுத்தன. ஆனால், அதற்கு அரசும், ஆளுநரும் ஒப்புதல் தரவில்லை. இதனைத் தொடர்ந்து, தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணத்தை ஓரளவுக்கு உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் இப்போது முடிவு செய்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக இந்தத் தேர்வுக் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை.
கட்டண உயர்வு எவ்வளவு? எனவே, இப்போது தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் இளநிலை படிப்புகளுக்கான  தேர்வுக் கட்டணத்தை தாள் ஒன்றுக்கு ரூ.60 என்றிருந்ததை இப்போது ரூ. 120- ஆக உயர்த்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அதேபோல், எம்.பி.ஏ. படிப்புக்கான தேர்வுக் கட்டணத்தை ரூ. 400 என்ற அளவிலிருந்து ரூ. 500-ஆகவும், எம்.எஸ்சி.-ஐடி தேர்வுக் கட்டணத்தை தாள் ஒன்றுக்கு ரூ. 175-லிருந்து ரூ.360-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. பி.எட். படிப்புக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100 என்ற அளவிலிருந்து ரூ. 360-ஆக உயர்த்தப்பட உள்ளது. பிற முதுநிலை படிப்புகளுக்கான கட்டணம் ரூ. 200-லிருந்து ரூ.300-ஆகவும், செய்முறை திட்டங்களுக்கான கட்டணம் ரூ. 120-லிருந்து ரூ.150-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியது:
பல்கலைக்கழகத்தின் நிதிநிலையைச் சரிசெய்வதற்காக பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தேர்வுக் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த உயர்வு, பிற பல்கலைக்கழகங்களில் இப்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைவிடக் குறைவுதான். பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்சிக் குழுவில் இந்த கட்டண உயர்வுக்கு அனுமதி பெறப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com